பிரித்தானியாவில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிக்கன் உணவு வகைகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட, சமைக்கப்பட்ட சிக்கன் தயாரிப்புகளில் இந்த சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி இருக்கலாம் என பிரித்தானிய சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளார்கள்.
பிரித்தானியாவிலுள்ள Hull என்ற இடத்தில் அமைந்துள்ள, பிரித்தானியாவின் மிகப்பெரிய சிக்கன் விநியோகஸ்தரான Cranswick உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் வழக்கமான சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு சால்மோனெல்லா நோய்க்கிருமிகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. பல்வேறு உணவகங்களுக்கு அந்த தொழிற்சாலையிலிருந்து சிக்கன் அனுப்படுவதால் அந்த சிக்கனில் சால்மோனெல்லா பாதிப்பு இருக்கக்கூடும் என்று நம்பும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என்னென்ன உணவுகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டும் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
அவ்வகையில் பிரித்தானியர்கள் விரும்பி உண்ணும் உணவுகள் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட, சமைக்கப்பட்ட சிக்கன் தயாரிப்புகளில் இந்த சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆகவே, Tesco, Aldi, Sainsbury’s, Co-Op, Amazon, Costa, Cranswick, One Stop மற்றும் Starbucks முதலான பல்வேறு உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் சம்பந்தப்பட்ட சிக்கன் தயாரிப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.
அத்துடன், அந்த உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அந்த உணவுகள் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சால்மோனெல்லா கிருமி தொற்று ஏற்பட்டால், வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி முதலான பிரச்சினைகள் ஏற்படுவதுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையும் ஏற்படலாம்.
ஆனால், இதுவரை பிரித்தானியாவில் இந்த சிக்கன் உணவுகளை உண்டதால் யாரும் சால்மோனெல்லா தொற்றுக்கு ஆளானதாக உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.