புதுடெல்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள வாதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வழக்கின் இறுதிவாதங்களை எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் தாக்கல் செய்துள்ள விவரம் வருமாறு:
ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றத்தால் ஆயுளாக தண்டனை குறைப்பு செய்யப்பட்டது. மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான மனு குடியரசுத் தலைவர் முன்பாக பரிசீலனையில் உள்ளது. ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இதைத்தவிர வேறு எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது. பேரறிவாளன் விவகாரத்தில் குற்றத்தின் தீவிர தன்மை, ஆதாரங்கள் உள்ளிட்ட எதையுமே கருத்தில் கொள்ளாமல் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.
எனவேதான், ஆளுநர் இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழான குற்றத்துக்காக மனுதாரர் தண்டனை பெற்றிருந்தாலும் இந்த வழக்கை விசாரித்தது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு என்பதால் இதில் மாநில அரசு முடிவெடுக்க முடியாது. தடா சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால் சட்டப்பிரிவு 73-ன்படி மத்திய அரசுக்குத்தான் முழு அதிகாரமும் உள்ளது. ஆளுநர் இதுதொடர்பாக பரிந்துரை செய்துள்ளதால் தற்போது குடியரசுத் தலைவர் மட்டுமே முடிவு எடுக்க முடியும். எனவே, பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது.
பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வ வாதத்தில், ‘தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியல் சாசனத்துக்கு முரணானது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302-ன்கீழ் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உள்ளது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றால், இத்தனை ஆண்டுகளாக ஆளுநர் தனக்குரிய அதிகாரம் 161-ன் கீழ் அளித்த மன்னிப்பு, தண்டனை குறைப்பு போன்றவை அரசியல் சாசனத்துக்கு முரணாகி விடும். எனவே, உச்ச நீதிமன்றம் தனக்குரிய பிரத்யேக அதிகாரமான 142-ஐ பயன்படுத்தி, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டும்’ என கோரியுள்ளார்.