புதுடெல்லி: உக்ரைன் தலைநகர் கீவ்வில் இந்திய தூதரகம் வரும் 17ம் தேதி முதல் செயல்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. தற்போது, 2 மாதங்களை கடந்து போர் நடந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்த தொடங்கியதும், அங்கு செயல்பட்டு வந்த இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் மூடப்பட்டன. இந்தியா தனது தூதரகத்தை அண்டை நாடான போலந்தில் உள்ள வார்ஷாக்கு தற்காலிகமாக மாற்றியது.இந்நிலையில், தலைநகர் கீவ் மீதான தாக்குதலை ரஷ்யா குறைத்துள்ளது. இதையடுத்து, பிரிட்டன், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தங்களின் தூதரகத்தை மீண்டும் கீவ்வில் திறக்கின்றன. அதேபோல், வரும் 17ம் தேதி கீவ் நகரில் இந்திய தூதரகம் செயல்படும் என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.