வடசென்னையைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. கணவரைப் பிரிந்து 17 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. புவனேஸ்வரியுடன் முத்துக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதனால் முத்துக்குமார், தன்னுடைய குடும்பத்தை விட்டுப் பிரிந்து புவனேஸ்வரியுடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புவனேஸ்வரி வீட்டில் இல்லாத நேரத்தில் முத்துக்குமார், அவரின் 17 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார். அதை சிறுமி, தன்னுடைய அம்மா புவனேஸ்வரியிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து முத்துக்குமாரைக் கண்டிக்காத புவனேஸ்வரி, தன்னுடைய மகளின் மனதை மாற்றியிருக்கிறார். அதன்பிறகு சிறுமியுடன் முத்துக்குமார் எந்தவித தடையுமின்றி நெருங்கிப் பழகியிருக்கிறார்.
அதனால் 17 வயது சிறுமி கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் சிக்கல் எனக் கருதிய புவனேஸ்வரி வீட்டிலேயே பிரசவம் பார்த்திருக்கிறார். அதில், சிறுமிக்கு ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது. அதனால் எந்தவித பிரச்னையும் இல்லை எனக் கருதிய புவனேஸ்வரியும், முத்துக்குமாரும் சந்தோஷமாக இருந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டிலேயே கை வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. அதனால் குழந்தையை தூக்கிக் கொண்டு புவனேஸ்வரி அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார்.
மருத்துவமனையில் குழந்தையின் அம்மா, அப்பா ஆகியோர் குறித்து விசாரித்திருக்கின்றனர். அதற்கு பதிலளித்த புவனேஸ்வரியிடம் அம்மா, அப்பா ஆகியோரின் ஆதார் கார்டுகளை மருத்துவமனை ஊழியர்கள் கேட்டிருக்கின்றனர். அதை புவனேஸ்வரி கொடுத்ததும் குழந்தையின் அம்மாவுக்கு வயது 17 எனத் தெரிந்ததும் மருத்துவமனை ஊழியர்கள், குழந்தைகள் நலக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த குழந்தைகள் நலக்குழுவினர், புவனேஸ்வரியின் 17 வயது மகளிடமும் விசாரணை நடத்தினர். இந்தத் தகவலைத் தெரிந்ததும் புவனேஸ்வரியும், முத்துக்குமாரும் தலைமறைவாகி விட்டனர். பின்னர், குழந்தைகள் நலக்குழுவினர் அளித்தப் புகாரின்பேரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புவனேஸ்வரி, முத்துக்குமாரைத் தேடிவருகின்றனர். சிறுமியையும் குழந்தையையும் காப்பகத்தில் சேர்த்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் வடசென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.