சென்னை: பதில் கடிதம் அனுப்ப இவ்வளவு கால நீட்டிப்பு எடுத்துக் கொண்டதைப் போல, முதுலை நீட் தேர்வுக்கும் கால நீட்டிப்பு வழங்குங்கள் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் முதுநிலை நீட் தேர்வு திட்டமிட்டபடி வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தேர்வு தொடர்பான தகவல்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் முதுலை நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்திற்கு தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், “நீட் முதுகலை தேர்வுகளுக்கு கால நீட்டிப்பு கேட்டு கடிதம் எழுதினால் 21 நாள் கழித்து கடிதம் கிடைத்ததாக பதில் வருகிறது. இந்த பதிலுக்கு இவ்வளவு கால நீட்டிப்பு எடுத்துக்கொண்டதைப் போல, தேர்வுக்கும் கால நீட்டிப்பு வழங்குங்கள் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.