புதுடெல்லி: மே 21-ம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
2022-ம் ஆண்டுக்குரிய, முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வை தள்ளிவைக்கக் கோரி மருத்துவர்கள் சிலர், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந் தனர்.
மருத்துவர்கள் பங்கேற்பதில் சிக்கல்
அதில், 2021-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் கலந்தாய்வு தற்போதுதான் முடிந்துள்ளது. இதில் வாய்ப்பு கிடைக்காத மருத்துவர்களுக்கு, 2022-ம் ஆண்டுக்குரிய நீட் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்க வேண்டும். ஆனால், 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு மே 21-ல் நடத்தப்பட உள்ளதால், பெரும்பாலான மருத்துவர்களால் அதில் பங்கேற்க இயலாது. எனவே, முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மே 21-ம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகி வரும் சூழலில், திடீரென தேர்வை தள்ளிவைக்க வேண்டுமென நாங்கள் எப்படி உத்தரவிட முடியும்’’ என்று கேள்வி எழுப்பினர்.
மனுதாரர்கள் தரப்பில், ‘‘2021-ல்நடத்தப்பட்ட நீட் தேர்வின்படி, பல மாநிலங்களில் அதற்கான கலந்தாய்வு நடந்து முடியவில்லை. இந்தச் சூழலில், தற்போது நடைபெறும் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மருத்துவ மாணவர்கள் 2022-ம் ஆண்டுக்கான தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும். மே 21-ம் தேர்வை நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று வலியுறுத்தப்பட்டது.
தேவையற்ற குழப்பம் ஏற்படும்
மத்திய அரசுத் தரப்பில், ‘‘இத்தேர்வில் பங்கேற்க 2.06 லட்சம் மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டுகளைவிட அதிகம். ஏற்கெனவே காலம் கடந்து விட்டது. எனவே, தேர்வை தள்ளிவைக்க முடியாது’’ என்றனர்.
அப்போது குறுக்கிட்ட நீதி பதிகள், ‘‘ஒரு தரப்பு மாணவர்கள் தேர்வுக்காக காத்திருக்கின்றனர். மற்றொரு தரப்பு மாணவர்கள் தள்ளிவைக்க கோருகின்றனர். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தேர்வை தள்ளிவைத்தால், தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடும். எனவே, இது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.
கரோனா காலகட்டத்தில் நாடு முழுவதும் மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே,மே 21-ல் நடைபெற உள்ள நீட்தேர்வை தள்ளிவைக்க வேண்டு மென்ற கோரிக்கையை ஏற்க இயலாது’’ என்று தெரிவித்து, மனுக்களை தள்ளுபடி செய்தனர்.