முன்கூட்டியே விடுதலை கோர தண்டனை கைதிகளுக்கு உரிமை இல்லை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: முன்கூட்டியே விடுதலை செய்யும்படி உரிமை கோர தண்டனை கைதிகளுக்கு சட்டத்தில் இடம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தண்டனை  கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் நடவடிக்கை உள்ளது. இந்த நடவடிக்கை குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஏற்கனவே  தருமபுரியில் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்துக்கு தீ வைத்த சம்பவத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை தமிழக அரசு முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது. இதுபோல ஆட்சியாளர்களின் கண்ணசைவுக்கு ஏற்ப பலர் விடுதலையாகி வருகின்றனர். மேலும்,  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தனது மகன் ஹரிஹரனை முன்கூட்டியே  விடுவிக்ககோரி அவரது  தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தண்டனை கைதிகள் 1,650 பேரை விடுதலை செய்து தமிழக அரசு  உத்தரவிட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில் தனது மகனை விடுவிக்க அரசு மறுத்து விட்டது என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஏ.ஏ. நக்கீரன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது,  தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மனுதரார் மகன் மீது இரண்டு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாலும், சிறையிலும் நன்னடத்தை விதிகளை ஹரிஹரன் கடைபிடிக்காததாலும் அவரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என வாதிட்டார்.

இதை ஏற்று, அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்ததுடன்,  தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை கோர சட்ட ரீதியாகவோ, அடிப்படை ரீதியாகவோ உரிமையில்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த கருத்து, மற்ற வழக்குகளில் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிப்பதற்கு எந்த தடையும் இல்லை எனவும் தெளிவுப் படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே இதுபோன்ற ஒரு வழக்கை விசாரித்த உ யர்நீதிமன்றம், தண்டனை கைதிகள் விடுதலை விவகாரத்தில் மாநில அரசு,  ஒவ்வொரு வழக்கிலும் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்து வருவதாக குற்றம் சாட்டியதுடன்,  அரசியல் அழுத்தம் காரணமாக முடிவுகள் இதுபோல எடுக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பியதுடன், பத்து ஆண்டுகள் நிறைவு செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு முடிவு எடுத்தால், அந்த முடிவு அனைவருக்கும் சமமானதாகத்தானே இருக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.