புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிறுமிக்கு, திமுக எம்.பி. செந்தில் குமார் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தார்.
மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தின் மலார்கன்ச் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி, கடந்த மார்ச் 12-ம் தேதி தன் வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த தீபக் யாதவ் (34) என்பவர் வீடு புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இச்சம்பவத்தில் தீபக் யாதவ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது உயிருக்கு போராடி வருகிறார். இந்தூர் தனியார் மருத்துவமனையில் அவருக்கு ரூ.5 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. வீட்டை விற்று அவரது பெற்றோர் சிகிச்சைக்கு செலவு செய்தனர். மாவட்ட ஆட்சியர் பி.அனுராக்கிடம் இருந்து ரூ.50,000 மட்டுமே நிதியுதவி கிடைத்தது. தொடர் சிகிச்சைக்கு பணம் இன்றி அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
முகநூல் பதிவு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியை பற்றிய தகவல், ஒரு பொதுநல அமைப்பின் முகநூலில் பதிவாகி இருந்தது. இது, ‘இந்து தமிழ்’ நாளேட்டின் மூலம் திமுக எம்.பி. டாக்டர் டி.என்.வி. செந்தில் குமாரிடம் உதவி கோரியும் பகிரப்பட்டது. இதை ஏற்ற தருமபுரி எம்.பி.யான செந்தில்குமார், நேரடியாக இந்தூருக்கு வந்து சிறுமியின் தாயிடம் ரூ.1 லட்சம் நிதி அளித்தார்.
சென்னையில் சிகிச்சை
இது குறித்து செந்தில்குமார் கூறும்போது, “மத்திய பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையாக இலவச சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால் மனிதாபிமானத்தால் நான் அவர்களுக்கு உதவினேன். சிறுமி தொடர் சிகிச்சை பெற விரும்பினால் சென்னையில் அல்லது டெல்லியில் எய்ம்ஸ் போன்ற சிறப்பு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கத் தயார்” என்றார்.
வேறு மாநிலத்திற்கு வந்து திமுக எம்.பி. செந்தில் உதவுவது இது முதன் முறையல்ல. கடந்த பிப்ரவரி 7-ல் இவர், ஒடிசாவின் புரி மாவட்டத்தில் திளங்கா தாலுகாவில் ஒரு பழங்குடியினப் பெண்ணுக்கு பொறியியல் படிப்புக்கான கட்டணம் செலுத்த ரூ.1 லட்சம் அளித்தார்.