மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர் தீக்குளித்து இறந்து விட்டதாக கூறி உறவினர்களுடன் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்ற நிலையில் அடக்கம் செய்வதற்கு முன்னதாக சடலத்தை போலீசார் கைபற்றினர். சந்தேக கணவனுக்கு சம்மட்டி அடிகொடுத்த சம்பவத்தின் பகீர் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு இரண்டு மகன்ளும் ஒரு மளும் உள்ளனர். குடி போதைக்கு அடிமையான சக்திவேல் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினந்தோறும் போதையில் தகராறு செய்து அடித்து உதைத்து வந்துள்ளார்.
இதே போல சம்பவத்தன்று இரவு கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அனைவரும் படுக்கைக்கு சென்ற நிலையில் மறு நாள் காலையில் சக்திவேல் கருகிய நிலையில் வீட்டுக்குள் சடலமாக கிடந்தார்.
இரவு தன்னிடம் தகராறு செய்து விட்டு படுக்க சென்ற பின்னர் கணவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்துக் கொண்டதாக கூறி அவர் கதறி அழுததை நம்பிய உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சக்திவேலின் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
இறந்த சக்திவேலின் சடலத்தை கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு ஊர்வலமாக கொண்டு சென்று தகனமேடையில் கிடத்தி இறுதி சடங்குகள் செய்தனர். இதற்கிடையே அறிந்த கிராம நிர்வாக அலுவலர் புகழ்வேந்தன் என்பவர், மீனவர் சக்திவேலின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக்கிற்க்கு தொலைபேசி வாயிலாக புகார் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் சுடுகாட்டில் இருந்த சக்திவேலின் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சக்திவேலின் தற்கொலை தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுக்காமல் தகனம் செய்ய முயன்றது ஏன் ? என்று மனைவி வசந்தா மற்றும் மகன் ரூபனிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது வசந்தாவின் வலிகளால் நிகழ்ந்த விபரீத சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
கணவன் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து உதைத்தாலும் தனது 3 குழந்தைகளுக்காக அதனை பொறுத்துக் கொண்டு வசந்தா வாழ்ந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று வழக்கம் போல குடிபோதையில் வீட்டுக்கு வந்த சக்திவேல் வரைமுறை இல்லாமல் ஆபாசமாக பேசி அடித்து உதைத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து ஆவேசமான மனைவி வசந்தா வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து கணவர் சக்திவேல் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் பரிதாபமாக பலியானதாக கூறப்படுகிறது.
தந்தையை , தனது தாய் கொலை செய்ததை மறைப்பதற்கு , தாயின் மனவலியை உணர்ந்த மகன் ரூபனும் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்த கொலை சம்பவத்தை மறைப்பதற்காக வீட்டில் இருந்த துணிகளை சக்திவேலின் சடலத்தின் மீது போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்து அறையின் கதவை பூட்டி உள்ளனர்.
காலையில் தனது தாயுடன் சேர்ந்து தந்தை தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் கூறி உடலை அடக்கம் செய்ய உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து தாய் வசந்தா, மகன் ரூபன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை அடிமை போல எண்ணி அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய குடிகார கணவனுக்கு மனைவி கொடுத்த சுத்தியல் அடி கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது