சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களை சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைக்கும் வகையில் அரசின் சார்பில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் ரூ.25 கோடி செலவில் மொத்தம் 12000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 6 சேமிப்பு கிடங்குகள்;
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூர் கிராமத்தில் ரூ.2 கோடியே 65 லட்சம் செலவில் மொத்தம் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள்;
ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், இச்சிபாளையம் கிராமத்தில் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள்;
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், நாதேகவுண்டம்பாளையம் கிராமத்தில் ரூ.4 கோடியே 10 லட்சம் செலவில் மொத்தம் 3000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள்;
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கு சொந்தமான, திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், விளமல் கிராமத்தில் உள்ள திருவாரூர் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் ரூ. 77 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கு அலுவலகக் கட்டிடம் மற்றும் விருந்தினர் அறை என மொத்தம் ரூ. 35.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள், அலுவலகக் கட்டடம் மற்றும் விருந்தினர் அறை ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் பிரபாகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.