சென்னை: நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தபடி ரெப்கோ வங்கி நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்தாததால் கூட்டுறவு சங்கங்களின் இணை செயலாளர் மற்றும் ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரெப்கோ வங்கியின் நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி தனபால் என்பவர் 2019-ல் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் 51 சதவீதத்திற்கு மேல் பங்கு மூலதமானத்தை வைத்திருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவில் முன்மொழியப்பட்ட உறுப்பினர்களாக 3 பேர் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் ரெப்கோ வங்கியில் அதிகாரிகளால் முன்மொழியப்பட்ட உறுப்பினர்களே அதிகளவில் உள்ளனர். எனவே ரெப்கோ வங்கி நிர்வாக குழுவிற்கு முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக நிர்வாக குழுவை கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ரெப்கோ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தப்படி நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி 2021-ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். அதற்கு ரெப்கோ வங்கி அளித்த பதிலில், ரெப்கோ வங்கி சட்டத்தில் விதிமுறைகளைத் திருத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை 6 முதல் 8 மாதங்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் உறுதியளித்தப்படி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், முடிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி தனபால் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை வேண்டுமென்றே அவமதித்தது நிரூபணமாகியுள்ளதாககூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு ஏற்றார்.
கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் விவேக் அகர்வால் மற்றும் ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ். இஸபெல்லா ஆகியோர் வரும் ஜூன் 17ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.