வடரெக சிறைச்சாலையின் கைதிகளையும் அவர்களின் பாதுகாப்பிற்கு வந்த சிறைச்சாலை அதிகாரிகளையும் கடந்த 05.09.2022 அன்று மாலபே தலாஹேன பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தியதுடன், சிறைச்சாலை உடமைகளுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நேற்று (12) பொலிசாரிடம் எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி, வடரெக சிறைச்சாலையில் இருந்த கைதிகளை அவர்களது பணியிடங்களுக்கு அழைத்துச் சென்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வந்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டக்காரக் குழுவொன்று, தலாஹேன பிரதேசத்தில் வைத்து இந்த சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளை பஸ்ஸிலிருந்து இறக்கி அவர்களை தாக்கியுள்ளதுடன் சிறைச்சாலை பஸ் மற்றும் உடமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.
சிறைச்சாலை ஆணையாளரின் உத்தரவின் பேரில், வடரெக சிறை கண்காணிப்பாளர் மற்றும் பிற அதிகாரிகள் இந்த கைதிகளை அலரிமாளிகைக்கு அழைத்துச் சென்று, மதுபானம் அருந்தக் கொடுத்து, கோட்டாகோ கம மற்றும் மைனா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தனது முறைப்பாட்டில், பொலிஸ் மா அதிபரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், தமக்கும் தனது அதிகாரிகளுக்கும் எதிராக இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்று வந்த பாதாள உலக செயற்பாடுகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கைதிகளின் கையடக்கத் தொலைபேசிகள் வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு தடையாக இருந்த சிறைச்சாலை அதிகாரிகளுடன் பகைமை கொண்ட கைதிகளால் மற்றும் அவர்களது குடும்பங்களால், சிறைச்சாலை மற்றும் அதிகாரிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேலும் மேலும் உண்மைக்குப்புறம்பான செய்திகளை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வடரெக சிறைச்சாலையின் அத்தியட்சகர் மீகொட பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளார்.