வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலுக்கான 128 சக்கரங்கள், உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பயணியரின் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த, 2019ல், வந்தே பாரத் என்ற அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, டில்லி – வாரணாசி மற்றும் டில்லி – காத்ரா இடையில், இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.நடப்பு பட்ஜெட் தாக்கலின்போது, ‘அடுத்த மூன்று ஆண்டுகளில், 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும்’ என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்நிலையில், ஹைதராபாதில் இயங்கும், ‘மேதா சர்வோ டிரைவ்ஸ்’ நிறுவனம், வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணிகளில், முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.இந்த ரயிலுக்கான சக்கரங்கள், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் இருந்து வாங்கப்பட்டு வருகின்றன. தற்போது அங்கு போர் நடப்பதால், சக்கரங்களை விரைந்து அனுப்ப முடியாத நிலை இருந்தது.இந்நிலையில், 128 ரயில் சக்கரங்கள் உக்ரைனில் இருந்து, சாலை மார்க்கமாக அதன் அண்டை நாடான ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
அங்கிருந்து, சிறப்பு விமானங்களில், அவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இதில், இரண்டு விமானங்கள், சென்னை விமான நிலையத்திற்கு வந்துஅடைந்தன. கடைசி விமானம் இன்று வந்தடைந்ததும், 128 சக்கரங்களும், ஹைதராபாதில் உள்ள தயாரிப்பு நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட உள்ளன. இந்த ரயில்களின் சோதனை ஓட்டம், ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Advertisement