பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடக்கும் உயர்மட்டக்குழு கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்கிறார்.
காங்., கட்சியைப் பலப்படுத்த, ராஜஸ்தானின் உதய்பூரில் சிந்தனையாளர் கூட்டம் நடந்து வருகிறது.
‘வீடியோ கான்பரன்ஸ்’
இங்கு, கட்சித் தலைவர் சோனியா தலைமையில், மூத்த தலைவர்கள் ஆலோசித்து வரும் நிலையில், இங்கிருந்து, 400 கி.மீ., தொலைவில் உள்ள ஜெய்ப்பூரில், பா.ஜ.,வும் தன்
பங்கிற்கு, ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளது.வரும் 19, 20, மற்றும் 21 தேதிகளில், பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தேசிய அளவிலான அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இதில் பா.ஜ., மூத்த தலைவர்களான, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மூவரும் பங்கேற்கின்றனர். டில்லியில் இருந்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடியும் உரையாற்ற உள்ளார்.
முக்கிய முடிவு
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள், நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இக்கூட்டத்தில் இத்தேர்தலுக்கான பணிகள் குறித்தும், 2024 லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும், மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. – நமது டில்லி நிருபர் –
Advertisement