பீஜிங்:சீனாவில் ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்ற விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இதில், 40 பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.
நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கே உள்ள சோங்கியிங் நகரில் இருந்து, அந்நாட்டின் கட்டுப்பாட்டிலிருக்கும் திபெத்தில் உள்ள நியிங்க்சி நகருக்கு, சீன விமானம் ஒன்று நேற்று காலை புறப்பட்டது.ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த விமானம், திடீரென அதிலிருந்து விலகிச் சென்றது. இதன் இன்ஜின் தரையில் பட்டதால், விமானத்தில் தீப்பற்றியது.
உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதில் இருந்த, ஒன்பது ஊழியர்கள், 113 பயணியர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், 40 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த மார்ச் 12ல் டென்ஜியானில் நடந்த விமான விபத்தில், 132 பேர் உயிரிழந்தனர். இது, 1994க்குப் பின் சீனாவில் நடந்த மிகவும் மோசமான விபத்தாகும். இந்நிலையில், இரண்டு மாதத்துக்குள் மற்றொரு விமானம் விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement