புதுடெல்லி: வெளிநாடு செல்பவர்கள் 2-வது டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு பூஸ்டர் டோஸ் போடுவதற்கான 9 மாத கால இடைவெளியை மத்திய அரசு குறைத்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவலை தடுக்க 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், 2-வது டோஸ் போட்டுக் கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் போடுவதற்கு 9 மாத இடைவெளி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதனால் வெளிநாடுகளுக்கு பயணம் செல்பவர்கள் 2-வது டோஸ் போட்ட பிறகு 9 மாதம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அந்த 9 மாத கால இடைவெளியை மத்திய அரசு நேற்று குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்கள், எந்த நாட்டுக்கு செல்கிறார்களோ அந்த நாட்டின் பயண வழிகாட்டு விதிமுறைகளின்படி உடனடியாக முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இந்த புது வசதி ‘கோவின்’ இணையதளத்தில் விரைவில் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
தற்போது இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. எனினும், 2-வது டோஸ் போட்டுக் கொண்ட பெரியவர்கள், முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் போடுவதற்கு 9 மாத இடைவெளி இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது வெளிநாடு செல்பவர்கள் 9 மாதம் காத்திருக்க தேவையில்லை.
மத்திய அரசு புள்ளிவிவரப்படி 18 வயது முதல் 59 வயது வரை உள்ள 12.21 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.