வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவையில் ஒரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 15-ம் தேதி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
வரும் 16-17-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17-ம் தேதியன்று, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதுபோல, வரும் 17-ம் தேதி, குமரிக்கடல் பகுதி, மன்னர் வளைகுடா, இலங்கை கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது.