“மரம் நடும் அறமே மாபெரும் அறம்” என்ற இயக்கத்தை செயல்படுத்தி, கடந்த 164 நாட்களில், 1720 பேர் மூலம், 12,939 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரின் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், மரம் நடும் அறமே மாபெரும் அறம் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறேன். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் மரம் நட வேண்டும்.
அவ்வாறு மரம் நட்டு அதன் புகைப்படத்தை அனுப்புபவர்களுடன் நான் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவிப்பேன் என்று அறிவித்திருந்தேன். அதன்படி 2021 நவம்பர் 30-ஆம் தேதி முதல் நேற்று ( மே 12) வரையிலான 164 நாட்களில் 1720 பேர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அவர்கள் மொத்தம் 12,939 மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
புவிவெப்பமயமாதல், காலநிலை மாற்றம் ஆகிய சவால்களை உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில், இன்றைய மிக முக்கியத் தேவை மரங்கள் தான். அதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் சிறிய பங்களிப்பு தான் இதுவாகும்”
இவ்வாறு அந்த பதிவில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.