புதுடெல்லி: மாநிலங்களவையில் காலியாகும் 57 எம்.பி.க்களின் இடங்களுக்கு ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் உட்பட 57 எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரின் பதவிக்காலம் முடிகிறது. இவர்கள் மீண்டும் பாஜக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபல், ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, ப.சிதம்பரம் ஆகியோரின் பதவிக்காலமும் முடிகிறது. இவர்களையும் சேர்த்து 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாகின்றன. இதில் பாஜக 23, காங்கிரஸின் 8 இடங்களும் அடங்கும்.
இதில் உ.பி.யில் 11, தமிழகம், மகாராஷ்டிராவில் தலா 6 இடங்கள் காலியாகின்றன. இதேபோல, பிஹார் 5, கர்நாடகா 4, ராஜஸ்தான் 4, ஆந்திரா 4, ம.பி. 3, ஒடிசா 3, பஞ்சாப், ஜார்கண்ட், ஹரியாணா, சத்தீஸ்கர், தெலங்கானாவில் தலா 2 இடங்கள், உத்தராகண்ட்டில் 1 இடம் என மொத்தம் 57 இடங்கள் காலியாகின்றன. இந்த இடங்களுக்கு ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான மனுதாக்கல் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. 31-ம்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள். ஜூன் 1-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ்பெற ஜூன் 3-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.