Don Review: எஸ்.கே vs எஸ்.ஜே.சூர்யா – காலேஜ் கலாட்டாக்களும், சென்டிமென்ட்டும்… பாஸாகிறானா டான்?

கடைசி பெஞ்ச் மாணவருக்கும், ஆசிரியருக்கும் நடக்கும் ஈகோ யுத்தம் ஒருபுறம், தன் வாழ்க்கையின் லட்சியம் என்ன என்பதை ஒவ்வொருவரும் தேட வேண்டும் என்கிற மெசேஜ் ஒரு புறம் எனக் கலந்துகட்டி கதை சொல்கிறது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் `டான்’.

டான் விமர்சனம்

இந்தியாவின் எல்லா மிடில் கிளாஸ் தந்தைகளைப் போலவே, சக்கரவர்த்தியின் தந்தையும் அவரை பொறியியல் படிப்பில் சேர்க்கிறார். சும்மாவே படிப்பு வராத ஹீரோவுக்கோ, பொறியியல் இன்னும் மோசமானதாக மாறுகிறது. இது போதாதென கல்லூரியில் பூமிநாதன் என்னும் ஆசிரியரின் கண்டிப்பும் கடுப்பேற்றுகிறது. படிப்பைவிடவும் ஒழுக்கம் முக்கியம் என நம்பும் அந்த ஆசிரியரால் கல்லூரியே அல்லல்பட, மீட்பராக வருகிறார் சக்கரவர்த்தி.

இருவருக்குமான ஈகோ யுத்தம் என்ன ஆனது? மாணவர் சக்கரவர்த்தியின் எதிர்காலம் என்ன? அப்பா மகன் எமோஷனல் பக்கங்கள், காதல், குறும்பு என எல்லாம் கலந்து ஒரு வெரைட்டி பேக்கேஜாக வந்திருக்கிறது `டான்’.

டான் விமர்சனம்

டானாக சிவகார்த்திகேயன். கல்லூரி மாணவரின் கதாபாத்திரத்துக்கும், பள்ளி மாணவன் பாத்திரத்துக்கும் உடல் எடையெல்லாம் குறைத்து நன்றாக பொருந்திப் போயிருக்கிறார். எஸ்.கே ஆடும் பாடல்களில் அவ்வளவு எனர்ஜி. எஸ்.ஜே.சூர்யாவிடம் சவால் விடுவது, சமுத்திரக்கனியிடம் மன்றாடுவது, மாணவர்களுடன் ரகளையாக இருப்பது என அவருக்கு இதில் ஒரு கலர்ஃபுல் ‘டான்’ வேடம். அதைச் சரியான மீட்டரில் அழகாகச் செய்திருக்கிறார்.

டிசிப்ளினரி வாத்தியாக ரெய்டு போகும் வேடம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. பூமிநாதனாக ஒவ்வொரு காட்சியிலும் வில்லத்தனத்தைக் கொட்டுகிறார். ‘வாலி’ பட ரெஃபரன்ஸ் கொண்ட மேனரிசம் ரகளையான சேர்ப்பு. கண்டிப்பான தந்தையாக சமுத்திரக்கனி. தற்போதைக்கு தென்னிந்தியாவில் அதிக திரைப்படங்கள் நடிப்பது சமுத்திரக்கனியாகத்தான் இருக்க வேண்டும். தெலுங்கில் ‘சும்மா வந்துபோகும்’ டெம்ப்ளேட் வில்லன் படங்களில் நடித்துக்கொண்டே தமிழில் கனமான வேடங்களுடன் கூடிய படங்கள் வரும்போது பிரமாதப்படுத்திவிடுகிறார். படத்தின் இறுதித் தருணங்களில் அவர் சிரிப்புடன் நகரும் காட்சி அழகானதொரு ஓவியம்.

நாயகி அங்கயற்கன்னியாக பிரியங்கா மோகன். அதட்டும் காட்சிகள், எமோஷனல் காட்சிகள் என வெயிட்டான ரோலாகவே அவரின் பாத்திரம் இருக்கிறது. ஆனால், நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். மனோபாலா, காளி வெங்கட், முனிஸ்காந்த், ஜார்ஜ் மரியன், செல்லா எனப் பல ஆசிரியர்கள். பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை என்றாலும், படத்தின் இறுதிக் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார் சிவாவின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா பாண்டிலட்சுமி. சூரி, ஆர்ஜே விஜய், பிக் பாஸ் ராஜூ, பால சரவணன், ஷிவாங்கி, ஷாரிக் ஹாசன் என நீள்கின்றது துணை நடிகர்கள் பட்டாளம். இந்தக் கூட்டத்தில் விஜய், பால சரவணன், ராஜூ ஆகியோர் ஈர்க்கிறார்கள்.

டான் விமர்சனம்

கல்லூரி வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை, ஆசை, கனவு, சென்டிமெண்ட் , ரகளை என எல்லாம் கலந்து முதல் படத்திலேயே கமர்ஷியல் பேக்கேஜ் ஒன்றைத் தயார் செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சிபி சகரவர்த்தி. அது நிறைய இடங்களில் ஒர்க்அவுட்டும் ஆகியிருக்கிறது.

இரண்டாம் பாதியில் சினிமாத்தனங்கள் ஆங்காங்கே தென்பட்டாலும், எமோஷனல் காட்சிகள் பார்வையாளர்களிடம் சொல்ல வேண்டியதை கச்சிதமாகச் சொல்லிவிடுகின்றன. அந்த வகையில் பெரிய ஹீரோவுக்கான முதல் படத்தை சேஃபாக லேண்டு செய்திருக்கிறார் சிபி.

நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் எல்லாருக்கும் சரியான விகிதத்தில் காட்சிகளை அமைத்திருக்கிறார். அனிருத்தின் இசையில் ‘ஜல புல ஜங்கு’ இனி எவர்க்ரீன் கல்லூரி கல்ச்சுரல்ஸ் பாடலாக மாறிவிடும். ‘ப்ரைவேட் பார்ட்டி’ பாடல் கலர்ஃபுல்லாக எடுக்கப்பட்டிருக்கிறது. ‘பே’ பாடலும் இறுதியில் வரும் அந்த மோட்டிவேஷன் பாடலும் ஏனோ பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் வழக்கம்போல எமோஷன்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார் அனி.

இத்தனை பிளஸ்கள் இருந்தும் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட், ரகளையான மாணவர் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் கதாபாத்திரத்துக்கு சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்க வேண்டிய முதல் பாதி காட்சிகள் ஏனோ சுமாராகவே கடந்து போகின்றன. படத்தில் நிறைய கிளைக் கதைகள் இருப்பதால், இதில் கவனம் செலுத்த மறுந்துவிட்டார்களா எனத் தெரியவில்லை.

பள்ளிக்கால காட்சிகளின் நீளத்தையும் சற்று குறைத்திருக்கலாம். ஏழு கடல் ஏழு மலையைத்தாண்டி காரில் நெடுந்தூரம் பயணம் செய்யும் சிவகார்த்திகேயனின் ‘ஒரு பக்கம் சாயுதாம், இன்னொரு பக்கம் சரியுதாம்’ டைப் பீதிகளும் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அதெல்லாம் எதுக்கு பாஸு?

டான் விமர்சனம்

முதல் பாதி கல்லூரி காட்சிகளுக்கு இன்னும் சிரத்தை எடுத்திருந்தால் `டான்’ இன்னுமே கலர்ஃபுல்லாக இருந்திருக்கும். ஆனாலும், இப்போதும் திரையரங்குகளுக்கு குடும்பமாக வந்து நிம்மதியாக ஒரு படம் பார்க்கும் அனுபவத்தை இந்த `டான்’ நிச்சயம் தரும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.