பங்குச் சந்தையை உலுக்கிய அதேசமயம் இன்னமும் பதில் கிடைக்காத பல நூறு கோடி மதிப்பிலான என்.எஸ்.இ முறைகேட்டில் சமப்ந்தப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்ரமணியன் இருவரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2013 முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்கு சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகித்த சித்ரா ராமகிருஷ்ணன், பதவிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி விசாரணையை மேற்கொண்டது. விசாரணையில் கோ-லொகேஷன் முறைகேட்டில் அவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல் எந்த முன் அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை என்.எஸ்.இ.யின் தலைமை ஸ்ட்ரேட்டஜிக் அதிகாரியாக நியமித்ததுடன், விதிமுறைகளை மீறி பல சலுகைகள் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு காரணம் கோ-லொகேஷன் முறைகேட்டில் ஆனந்த் சுப்ரமணியனும் முக்கிய புள்ளியாக செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மர்ம சாமியார் யார் என்பதும் இதுவரை தெரியாமல் உள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக ஆனந்த் சுப்பிரமணியனை பிப்ரவரி 25-ஆம் தேதியும், சித்ரா ராமகிருஷ்ணனை மாா்ச் 6-ஆம் தேதியும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா்.
இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் இருவரும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் அகர்வால், ஜாமீன் வழங்குவதற்கு போதிய காரணம் இவர்களுடைய மனுவில் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இது ஆனந்த் சுப்ரமணியனுக்கு இரண்டாவது ஜாமீன் மனுவாகும். சித்ரா ராமகிருஷ்ணனுக்கு முதல் மனுவாகும். இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சித்ரா தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி ஆவணங்கள், ஆதாரங்களை அழிக்கவோ அல்லது அவர்களுக்குச் சாதகமாக மாற்றவோ வாய்ப்புள்ளது. எனவே ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் வழங்கினால் அது விசாரணையின் போக்கை பாதிக்கும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.