2009 மே மாதத்தில், ஈழப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம், `சிங்களர்களின் மாமன்னன்’ எனச் சிங்கள மக்களால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப்பட்டார் மகிந்த ராஜபக்சே. சரியாக 13 ஆண்டுகள் கழித்து, 2022 மே மாதத்தில், அதே சிங்கள மக்களால் பிரதமர் பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார் அவர். அன்று அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த மகிந்த, இன்று சிங்கள மக்களுக்குப் பயந்து தமிழ்ப் பகுதியான திரிகோணமலையில் ஒளிந்து கொண்டிருக்கிறார். கடந்த இரு தசாப்தங்களாக இலங்கையில் கோலோச்சிய மகிந்தவின் அரசியல் சாம்ராஜ்ஜியம் சுக்கு நூறாக்கப்பட்டிருக்கிறது. தனக்கு வாக்களித்தவர்களே தன்னை ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கியெறிவார்கள் என மகிந்த உள்பட எவருமே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
1930-களிலேயே ராஜபக்சே குடும்பம் இலங்கை அரசியலில் கால்பதித்தது. 1936-ல் நடந்த தேர்தலில் ராஜபக்சே குடும்ப உறுப்பினரான டான் மேத்யூ ராஜபக்சே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று, அரச சபை உறுப்பினராகப் பதவியேற்றார். அதைத் தொடர்ந்த இவரின் சகோதரர் டான் ஆல்வின் ராஜபக்சே இலங்கை அரசியலில் களமிறங்கினார். 1947 முதல் 1965 வரை இலங்கையின் எம்.பி-யாக இருந்தவர், அமைச்சராகவும் பணியாற்றினார். இவருக்கு சமல், ஜெயந்தி, மகிந்த, கோத்தபய, சந்திரா, பசில், டட்லி, ப்ரீத்தி, கந்தானி என ஒன்பது குழந்தைகள். இந்தக் குடும்பம்தான் தற்போது வரை இலங்கை அரசியலில் முக்கியப் பங்கு வகித்துவருகிறது. அதிலும் குறிப்பாக மகிந்ததான், ராஜபக்சே குடும்பத்திலிருந்த வந்த முதல் அதிபர்.
முதல்முறையாக 2005 அதிபர் தேர்தலில் போட்டியிட்டார் மகிந்த. அதுவரை அமெரிக்காவில் வாழ்ந்துவந்த அவரின் இளைய சகோதரர்களான பசிலும், கோத்தபயவும் அண்ணன் போட்டியிடுவதாக அறிவித்த பிறகு இலங்கை திரும்பினர். மகிந்த போட்டியிட்டதால், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அமைப்புகள் அதிபர் தேர்தலைப் புறக்கணித்தனர். இந்த புறக்கணிப்பின் மகிந்தவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. 2 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் மகிந்த. இதையடுத்து, இலங்கையின் அனைத்துத் துறைகளிலும் கால்பதிக்கத் தொடங்கியது ராஜபக்சே குடும்பம். இலங்கையின் தற்போதைய சரிவுக்கு ஆரம்பப் புள்ளி அதுதான்.
2009-ம் ஆண்டு தன்னிடமிருந்த உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்டு ஈழப் போரை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டார் மகிந்த. அதன்படி உள்நாட்டுப் போரில் லட்சக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்தது சிங்கள ராணுவம். அப்போது இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த கோத்தபயதான், சிங்கள ராணுவத்தை முழுக்க முழுக்க வழி நடத்தினார். சிங்கள ராணுவத்தினர், அப்பாவித் தமிழர்களைச் சித்ரவதை செய்து கொன்றது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது என எல்லா கொடூரங்களுக்கும் மூலக் காரணம் மகிந்தவும், கோத்தபயவும்தான். ஈழப் போரில் பல்வேறு போர்க் குற்றங்கள் புரிந்ததால், மகிந்தவுக்கு எதிராக உலக நாடுகளிலுள்ள தலைவர்கள் குரல் கொடுத்தனர். இருந்தும், நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கையிலிருந்த காரணத்தால், `இது சர்வதேச சதி’ என்று சொல்லிப் போர்க் குற்றங்களிலிருந்து எளிதாகத் தப்பித்தார் மகிந்த. ஆனால், இன்று கதை தலைகீழாக மாறியிருக்கிறது.
கடந்த வாரம் இலங்கையிலுள்ள ராஜபக்சே குடும்பத்தின் பூர்வீக வீடு கொழுந்துவிட்டு எரிந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பகிர்ந்த நெட்டிசன்கள் பலரும், “அன்று அதிகார போதையில் தமிழர்களைக் கொன்று குவித்த மகிந்த ராஜபக்சே, இன்று சிங்கள மக்களால் விரட்டியடிக்கப்பட்டு அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என்று பதிவிட்டனர். “சுமார் 20 ஆண்டுகளாக இலங்கை அரசியலில் கோலோச்சிய மகிந்தவின் அரசியல் வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இன்னும் சில நாள்களில், தீவிரப் போர்க் குற்றங்கள் புரிந்த கோத்தபயவுக்கும் இதே நிலைதான் ஏற்படும். விரைவில் இவர்கள் இருவரும் சிறைக்குச் செல்லக்கூட வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள் இலங்கை அரசியலை உற்று நோக்குபவர்கள்.
2020-ம் ஆண்டில், சுமார் 69 லட்ச சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று பிரதமராகப் பதவியேற்றார் மகிந்த. தற்போது அதே மக்களால் அதிகம் வெறுக்கப்படும் மனிதராக மாறியிருக்கிறார். வாக்குகளுக்காக, இலங்கையிலுள்ள தமிழர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராகச் சிங்கள மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது ராஜபக்சே குடும்பம். ஆனால் இன்று, தமிழர்கள், இஸ்லாமியர்கள், சிங்களர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராகப் போராடிவருகிறார்கள். இலங்கை அரசியலில், காட்சிகள் அப்படியே தலைகீழாக மாறிவிட்டன.
ஒரு ஜனநாயக நாட்டில், சர்வாதிகார ஆட்சி புரிந்தால், அவர்கள் முடிவு எப்படியிருக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன இலங்கையின் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள்!