சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மே 20-ம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியில் நடப்பு கல்வி ஆண்டு (2021-22) 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு மே 5-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து, மாணவர்களுக்கு இன்று (மே 14) முதல் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.
பள்ளிகள் திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அலுவல்சார் பணிகளுக்காக ஆசிரியர்கள், மே 20-ம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
நடப்பு கல்வி ஆண்டின் (2021-22) பள்ளி வேலைநாள் மே 13-ம் தேதியுடன் (நேற்று) நிறைவு பெற்றது.
இதையடுத்து, மாணவர்களுக்கான வருடாந்திர விடுமுறை 14-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. அதேநேரம், மாணவர்களின் விடைத்தாள் திருத்துதல், மதிப்பெண் பதிவேடு தயாரிப்பு உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளுக்காக அனைத்து விதமான ஆசிரியர்களும் மே 20-ம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும். 14-ம் தேதி (இன்று) வரத் தேவையில்லை.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவல் பணிகளை மே 20-ம் தேதிக்கு முன்னரே முடித்துவிட்டால் அதன்பின் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை. வெளிநாடு செல்வதற்காக முன் அனுமதி பெற்ற ஆசிரியர்களுக்கு இந்த பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பொதுத் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அப்பணி முடிந்தபின் அலுவல் வேலையை செய்ய வேண்டும். மேலும், 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதிக்குள் பள்ளிகளில் வெளியிடப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.