அலுவலகத்துக்கு வந்து பணி புரிய மறுத்து 800 பேர் ராஜினாமா

மும்பை

ல்லத்தில் இருந்து பணி புரிந்து வரும் ஊழியர்களை ஒரு நிறுவனம் அலுவலகம் வந்து பணி புரிய கோரியதால் 800 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

 

ஏராளமான நிறுவனங்கள் கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்தன.   ஊழியர்கள் அந்தச் சூழ்நிலையில் பழகிவிட்டனர்.   தற்போது கொரோனா குறைந்து வருவதால் அவர்களை அலுவலகத்துக்கு வந்து பணி புரிய நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.   ஆனால் ஊழியர்கள் அலுவலகம் வந்து பணிபுரிய ஆர்வமாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிறுவனங்களில் ஒன்றான வொயிட் ஹாட் ஜூனியர் நிறுவனத்தை பைஜூஸ் நிறுவனம் 2020 ஆண்டு கையகப்படுத்தியது. இந்நிறுவனத்தை 30 கோடி டாலருக்கு பைஜூஸ் வாங்கியது.  இந்த நிறுவனம் கடந்த மார்ச் 18-ம் தேதி தனது பணியாளர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி மும்பை, பெங்களூரு, குருகிராமில் உள்ள அலுவலகங்களுக்கு பணிக்குத் திரும்புமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊழியர்கள் ஒரு மாதத்துக்குள் அலுவலகத்தில் நேரடியாக ஆஜராகுமாறும் அன்றில் இருந்து அலுவலகத்திலிருந்து பணிபுரியும் நடைமுறையைச் செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.  இந்த மின்னஞ்சல் அனுப்பியதில் இருந்து ஊழியர்கள் ஒருவர் பின் ஒருவராக தங்களது ராஜினாமாவை மின்னஞ்சல் மூலமாக அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிறுவன ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர ஊழியர்கள் பலர் தொடர்ந்து ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.   மேலும் நிறுவனம் செலவைக் குறைக்க ஆட்குறைப்பு செய்யலாம் என்னும் எதிர்பார்ப்பிலும் இவ்வாறு ஊழியர்கள் ராஜினாமா செய்வதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.