சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட 21 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகள், பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்தி:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான தனி பணிக்குழு நிதியான ரூ.50 லட்சத்தில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையை கொண்டு ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களின் சிறந்த 10 படைப்புகள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாதோர் ஒருவரின் சிறந்த படைப்பையும் சேர்த்து மொத்தம் 11 படைப்புகளைச் சேர்த்து அவற்றுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சங்கத்தின் மூலம், 2020-21 ஆண்டுக்கான சிறந்த படைப்பாளர்களாக இ.முருகேசன் (சட்டப்பார்வையில் ஆவணங்கள்), கு.வாஞ்சிநாதன் (களம்கண்ட தமிழ்), ஆர்.இலங்கேஷ்வரன் (விண்ணைத் துளைக்கும் விழுதுகள்), முனைவர் பி.சிவலிங்கம் (அறிவுலக மேதை அம்பேத்கர்), பானு ஏழுமலை (அம்பேத்கர் தான் ஆற்றிய உரையும், விவாதங்களும்), ஆ.பிரியாவெல்சி (ஆத்மம்பழகு அனைத்தும் பழகு), பொ.பொன்மணிதாசன் (பொன்மணி தாசன் கவிதைகள்), கே.சுப்பிரமணி (சிகரங்களுக்கான விலாசங்கள்), யாக்கன் (டாக்டர் அம்பேத்கர் அரசமைப்பு சட்ட அவைக்குள் நுழைந்த வரலாறு அதன் பின்னணி அரசியல் சூழ்நிலைகள்), ஆர்.காளியப்பன் (ஆநிரை), ந.வெண்ணிலா (பழந்தமிழர் மானிடவியல்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, 2021-22 ஆண்டுக்கான சிறந்த படைப்பாளர்களாக எஸ்.கே.அந்தோணிபால் (பறையர்கள் ஆட்சியும் வீழ்ச்சியும்), த.மனோகரன் (இந்திய நாட்டின் கவுரவம் டாக்டர் அம்பேத்கர்), புலவர் இர.நாகராஜ் (பைந்தமிழ் பூங்காற்று), கருவூர் கன்னல் (ஓர் ஊரின் கதை), அன்புதீபன் (அவள் தேடிய சொந்தம்), தங்க செங்கதிர் (மானுடத் தெறிப்புகள்), அ.ப.காரல் மார்க்ஸ் சித்தாந்தர் (அம்பேத்கரின் புத்தரும் அவர் தம்மமும்) த.கருப்பசாமி (சித்தர்இலக்கியங்கள் காட்டும் ஆன்மிகமும் மருத்துவமும்), ம.தமிழ்ச்செல்வி (நிழல் பருகும் நீர்), ஜெ.மதிவேந்தன் (சங்கம்- ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 21 எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முதல் தவணை தொகையாக தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்களை தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார்.
மேலும், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகம் சார்பில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஏப்.23 முதல் 29-ம் தேதி வரை 9-வது தேசிய பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை விழா நடந்தது. இதில், ஊட்டியை சேர்ந்த 3 தோடர் இன பெண்கள் பங்கேற்றனர். இதில், தோடர் இன மக்களால் கம்பளி நூல்களைக் கொண்டு கைகளால் நெய்யப்படும் பூத்தையல் தேசிய அளவில் முதலிடம் பெற்றது.
இதற்கான பரிசுத் தொகையாக ரூ.5 ஆயிரமும் பழங்குடியினர் ஆய்வு மையத்துக்கு கேடயமும் மத்திய அரசால் வழங்கப்பட்டது. இதில், பங்கேற்ற தோடர் பழங்குடியின பெண்களும், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் ச.உதயகுமார் ஆகியோரும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், செயலர் க.மணிவாசன், ஆணையர் சோ.மதுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.