லண்டன்:
பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் நைஜீரியா நாட்டிற்கு சென்று லண்டன் திரும்பிய நிலையில், அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு இந்த வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிய சுகாதார ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட நபர் பிரிட்டனுக்கு விமானத்தில் வந்தபோது, அவரது அருகில் அமர்ந்து பயணித்தவர்கள் குறித்த தகவலும் திரட்டப்படுகிறது.
இந்நிலையில், லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 7ம் தேதி தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் இவர்கள் பயணிக்கவில்லை. இவர்களுக்கு இந்த தொற்றானது எவ்வாறு பாதித்தது என்று விசாரணை நடந்து வருகிறது.
குரங்கு அம்மை நோயானது எளிதில் பரவக்கூடியதல்ல. நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கி பழங்குவதன் மூலமே இந்த நோய் பரவுகிறது. அதிகமான மக்கள் நோய் தொற்று ஏற்பட்ட சில வாரங்களிலேயே குணமடைந்து விடுகிறார்கள்.
காய்சல், தலைவலி, தசை வலி, முதுகுவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். குரங்கு அம்மை நோயானது பிளவு ஏற்பட்ட தோல், சுவாசப்பாதை, கண், மூக்கு, வாய் போன்றவற்றின் மூலம் பரவுகிறது.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு கூறுகையில், ” இந்த நோய் தொற்றானது எளிதில் மக்களிடையே பரவாது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனித்திருப்பது நல்லது. பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க தொடர்புகொள்ளப்படுகிறார்கள் ” என்று தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் குரங்கு அம்மை நோய் தொற்றானது 2018-ல் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், ஒரு சிலருக்கு மட்டுமே இந்நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.