காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர். இந்த நிலையில, இன்று இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம்,“இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. இதன் காரணமாக பணவீக்கம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மாநிலங்களின் நிதி நிலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமாக இருக்கிறது. வளர்ச்சி விகிதத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இது தற்போதைய அரசாங்கத்தின் அடையாளமாக இருக்கிறது.
உலகளாவிய மற்றும் உள்நாட்டு முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். கடந்த எட்டு வருடங்களாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகும் நாட்டின் வளர்ச்சி தேக்க நிலையில் உள்ளது. இந்த மூன்று நாள்கள் மாநாட்டில் காங்கிரஸ் கட்சி வகுக்கும் கொள்கைகள் நாட்டு மக்களுக்கு நன்மை தரும் விதமாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.