டில்லி
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது குறித்த விவரம் இதோ
இந்தியா சர்வதேச அளவில் அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடாக விளங்குகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக கோதுமை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கடந்த 2 மாதங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் கோதுமை விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.
எனவே தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் அரசு கொள்முதலுக்குக் கோதுமை அளிப்பதை வெகுவாக குறைத்துள்ளனர். மேலும் கோதுமைக்கு நாடெங்கும் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கோதுமை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே உலகெங்கும் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வெளிநாடுகளுக்கு அதிக அளவில் கோதுமை ஏற்றுமதி செய்யும் போது உள்நாட்டில் கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே எகிப்து உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் இருந்து கோதுமையை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகின்றன. எனவே உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை மனதில் கொண்டு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தடை செய்து உத்தரவு இட்டுள்ளது.