இலங்கையின் அரசியல் நெருக்கடி! துரத்தியடிக்க வேண்டிய பொது எதிரி


இலங்கையில் இன்று அரசியல், பொருளாதார மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகளுக்கு அப்பால், மக்கள் மத்தியில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை  நம்பிக்கையை கட்டியெழுப்பலாகும்.

முக்கிய பொது எதிரி

நம்பிக்கையீனம் என்பது இலங்கை மக்கள் மத்தியில் இருந்து களையப்படவேண்டிய முக்கிய பொது எதிரியாகவே இருந்து வருகிறது.

இலங்கை நாடு, வெளிநாடுகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான நாளில் இருந்து நம்பிக்கையீனம் என்பது மக்கள் மத்தியில் வியாபித்துள்ள நோயாகவே கருதப்படுகிறது.

வெளிநாட்டவர்கள், இலங்கையை ஆண்டபோது, அவர்கள் மீது இலங்கையர்களுக்கு நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கலாம்

அதேபோன்று அவர்களுக்கும் இலங்கையர்கள் மீது நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கலாம்

அவர்கள் எப்போதும் இந்த நாட்டில் இருந்து வெளியேறிப் போக இருந்தவர்கள் என்பது காரணமாக இருந்திருக்கலாம்.

எனினும் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், இந்த இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்ப இலங்கையர்கள் அதுவும் அரசியல் மற்றும் குடியியல் தலைவர்கள் முன்வரவில்லை என்பதை பாரிய வரலாற்று தவறாகவே கருதவேண்டியுள்ளது.

இதற்கு காரணம் இலங்கையர்கள் என்ற நினைப்புக்கு பதிலாக இலங்கையர்கள் மத்தியில் இனம் என்ற நினைப்பு ஆழ ஊடுருவியதாகும்.

இந்த இனப்பற்றே இன்று வரை இலங்கையை நாசமாக்கியிருக்கிறது.

குறிப்பாக சுதந்திரத்துக்கு பின்னர் சிங்களத்தலைவர்களை நம்பிய தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களை இந்த விடயத்தில் குறைகூற முடியாது.

எனினும் அவர்கள் நம்பிய சிங்கள தலைவர்கள், சிறுபான்மை தமிழ் பேசும் சமூகத்துக்கு நம்பிக்கையை கொடுக்க தவறிவிட்டனர்.

சிங்கள பௌத்த இனம் என்ற போர்வையில் அவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகள், 70 ஆண்டுகள் கடந்தும் இன்றும் இலங்கையை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது.

போராட்டங்கள்

இலங்கையின் அரசியல் நெருக்கடி! துரத்தியடிக்க வேண்டிய பொது எதிரி

இலங்கையின் அரசியல் நெருக்கடி! துரத்தியடிக்க வேண்டிய பொது எதிரி

சிங்களவர்களால் தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற எண்ணம் வந்தபோதே தமிழர்கள் போராடத்தொடங்கினர்.

இதன் காரணமாக வன்முறைகள் ஏற்பட்டன.
அதேபோன்று சிங்கள தலைமைகள் தம்மை ஏமாற்றி வருகின்றன என்றபோதே தென்னிலங்கையில் கிளர்ச்சிகள் ஏற்பட்டன.

இந்த போராட்டங்கள், கிளர்ச்சிகள் மற்றும் வன்முறைகள் என்பன இலங்கையர்கள் மத்தியில் அதாவது அரசியல்வாதிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் அல்லது சிங்களவர்களுக்கும் தமிழ்- முஸ்லிம் இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பவில்லை.

மாறாக நம்பிக்கையின்மையை மேலும் அதிகரித்தன.
இந்த சூழ்நிலையில் அந்த நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு, பாதிப்பை ஏற்படுத்திய இனம் என்ற அடிப்படையில் சிங்கள இனத்துக்கே பாரப்படுத்தப்பட்டது.

எனினும் அந்த சிங்கள இனம் அதாவது சிங்கள இனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்கள் அதனை செய்யவில்லை.

மாறாக பிரச்சினையை தொடரவே அவர்கள் முயற்சித்தனர்.
இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு கட்டத்திலும் முக்கிய சிங்கள தலைவர்கள் எவரும் முன்வந்து இலங்கையர்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையீனங்களை களைவதற்கு முயற்சிக்கவே இல்லை.

அது, இன்று இலங்கையில் வாழும் மக்கள் தம்மை, சிங்களவர்கள் என்றும் தமிழர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் தனிப்படுத்தி அடையாளப்படுத்தும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

இலங்கையர்

இலங்கையின் அரசியல் நெருக்கடி! துரத்தியடிக்க வேண்டிய பொது எதிரி

எவராவது நான் இலங்கையர் என்ற தம்மை அடையாளப்படுத்திக்கொண்டாலும் அடுத்ததாக அவரை நோக்கி கேள்வி ஒன்று முன்வைக்கப்படும்.

அதுவே நீங்கள் என்ன இனம் என்பதாகும்.

இந்தநிலையில் இனங்களுக்கு மத்தியில் இருந்து வரும் இந்த நம்பிக்கையீனம் சுதந்திரத்தின் பின்னர், அரசியல் கட்சிகளுக்கு மத்தியிலும் வியாபித்திருப்பதை காணமுடிகிறது.

இலங்கையில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியும், தாம் ஆட்சி செய்த, செய்கின்றபோது, அனைவரையும் இலங்கையர்களாக கருதி ஆட்சி செய்யவில்லை.

அதேநேரம் இனங்களுக்கு அப்பால், தமது கட்சிகாரர்கள் சார்ந்த ஆட்சியையும் இலங்கையின் அரசியல்வாதிகள் சிறப்பாகவே கொண்டு செல்வதை பார்க்கமுடிகிறது.

இதுவே இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கான காரணம் என்பதை எம்மால் உணரமுடிகிறது.

கோட்டாபய-  சஜித்

இலங்கையின் அரசியல் நெருக்கடி! துரத்தியடிக்க வேண்டிய பொது எதிரி

கோட்டாபய ஜனாதிபதியின் மீது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நம்பிக்கையில்லை.

சஜித் மீது கோட்டாபயவுக்கு நம்பிக்கையில்லை.
(சஜித் பிரேமதாசவை காட்டிலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கோட்டாபய அதிக முக்கியத்துவம் கொடுத்து நியமித்தமையும் கூட இந்த நம்பிக்கையீனத்தின் பிரதிபலிப்பேயாகும்)
அதனை விட அரசியல் கட்சிகள் மத்தியில் உள்வீட்டு பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் நம்பிக்கையீனங்களே காரணங்களாக அமைந்துள்ளன.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாட்டு மக்களுக்கு நம்பிக்கையில்லாமல், நாட்டின் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள் என்பதைக் காட்டிலும், தமது கட்சிக்குள்ளே நம்பிக்கையை இழப்பதற்கு எதேச்சதிகாரம், குடும்ப, சாதி, பிரதேசவாதம் என்பனவும்
காரணங்களாக அமைந்துள்ளன.

இதனை இன்றைய அரசியல் கட்சிகள் மத்தியில் தெளிவாக பார்க்கக்கூடியதாக உள்ளது.

எனவே இலங்கையின் அரசியல்வாதிகள் இதயசுத்தியுடன் நடந்துக்கொள்வதற்காக இறையால், இறக்கப்பட்ட இயற்கை தண்டனையாகவே கொரோனா தொற்றை பார்க்கமுடியும்.

கொரோனா தொற்று காரணமாகவே நாட்டின் தலைவர்கள் இதுவரை காலமாக நாட்டை எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்பதை நாட்டு மக்கள் இன்று புரிந்துக்கொள்ள முடிந்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம்

இலங்கையின் அரசியல் நெருக்கடி! துரத்தியடிக்க வேண்டிய பொது எதிரி

ஆகவே மக்கள் மத்தியில் என்பதை காட்டிலும் ஒற்றுமை, புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை என்பவற்றை அரசியல் தலைவர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்பாடுகள் தற்போது குடியியல் அமைப்புக்களால் மேற்கொள்ளப்படவேண்டும்.

இதன் மூலமே தேசப்பற்று, தேசியக்கொள்கைகள் என்பவற்றை முன்னெடுக்கமுடியும். இலங்கையர்கள் அனைவரும் தேசப்பற்றாளர்களாக மாறவேண்டுமானால், அனைவரும் இலங்கையர்களாக மாறவேண்டும்.

இதனை காலிமுகத்திடல் போராட்டத்தினால் மாத்திரம் செய்துவிடமுடியாது.

இன்று நாட்டின் அரசியலில் முக்கிய பங்கையாற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் இந்த செயற்பாட்டை முன்னோக்கி கொண்டு சென்றால், இலங்கையில் ஒரு தேசிய அரசியல் வேலைத்திட்டத்தை எதிர்கால சமூகமாவது அனுபவிக்கும் என்று கூறமுடியும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.