புதுடெல்லி: செமஸ்டர் கட்டணம் செலுத்தாததால், உக்ரைனின் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து, தமிழக மாணவர்கள்உள்ளிட்ட 104 இந்திய மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரி முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால், அங்குள்ள தேசிய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் அதிகமாக சிக்கிய இந்தியரை மீட்க, பிரதமர் நரேந்திர மோடியின் ’ஆப்ரேஷன் கங்கா’ மூலம் சிறப்பு விமானங்கள் அமர்த்தப்பட்டன.
இதன்மூலமாக, மார்ச் இரண்டாவது வாரம் வரை அங்கு பயிலும் இந்தியர்களில் சுமார் 5,000 தமிழர்கள் உட்பட 20,000 மாணவர்கள் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் தங்கள் மருத்துவக் கல்வியை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தொடரும் வகையில் அனுமதி கோரி தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்டப் பல மாநிலங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தன. இதை பரிசீலனைக்கு ஏற்ற மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் ஆலோசனை கேட்டிருந்தது. இதன் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், போர் தொடங்கிய பின்னர் உக்ரைன் பல்கலைக்கழகங்கள் ஒரு சிறு இடைவெளிவிட்டிருந்தன. பின்னர் தாய்நாடு திரும்பிய மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளை தொடங்கின. இந்நிலையில், செமஸ்டர் தேர்வுக் கட்டணத்தை செலுத்தும்படி மாணவர்களுக்கு உக்ரைன் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தின.
இந்தியாவிலேயே மருத்துவக் கல்வியை தொடரலாம் என்ற நம்பிக்கையில் பலரும் செமஸ்டருக்கானக் கட்டணங்களை செலுத்தவில்லை. இதனால், உக்ரைனின், டினிப்ரோ மெடிக்கல் இன்ஸ்டிடியூட் எனும் மருத்துவப் பல்கலைகழகம், 104 இந்திய மாணவர்களை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்கள் கூறியதாவது:
போர் தொடங்கி நாங்கள் மீட்கப்பட்ட போது இந்தியாவிலேயே எங்கள் கல்வி தொடரும் என்ற நம்பிக்கையை அரசுகள் அளித்தன. இதை நம்பி நாங்கள், பிப்ரவரியில் கட்ட வேண்டிய ஒரு செமஸ்டர் தொகை ரூ.1.5 லட்சத்தை, மூன்று மாதங்கள் அவகாசம் அளித்தும் செலுத்தவில்லை.
மாணவர்கள் போராட்டம்
இதனால் உக்ரைன் மருத்துவப் பல்கலைக்கழகங்களும் மாணவர்களை நீக்கத் தொடங்கியுள்ளன. கேள்விக்குறியாகிவிட்ட எங்கள் எதிர்காலத்தை சரிசெய்ய, மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, இந்தியர்கள் 54 மாதங்களுக்கு குறைவானக் கல்வி பிரச்சினையால் பிலிப்பைன்ஸிலும், கரோனா வைரஸ் தொற்று பரவலால் சீனாவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில், உக்ரைனில் மருத்துவ படிப்பில் சேர்ந்து பாதியில் விட்டுவிட்டு வந்த இந்திய மாணவர்கள் தற்போது இங்கும் கல்வியை தொடர முடியாத நிலை உருவாகி உள்ளது.