ஈரோடு: ஈரோட்டில் தடைசெய்யப்பட்ட லாட்டரியால், ரூ 62 லட்சத்தை இழந்த நூல் வியாபாரி, தற்கொலைக்கு முன்பாக திமுக கவுன்சிலரின் கணவர் பெயரைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு எல்லப்பாளையம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (54). நூல் வியாபாரியான இவர், நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக உருக்கமாக பேசி வீடியோ பதிவு செய்த ராதாகிருஷ்ணன், அதில் தனது தற்கொலைக்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார். வீடியோ பதிவில் ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். கருங்கல்பாளையம் கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில். இவர் லாட்டரி ஏஜென்சி நடத்தி வருகிறார். இதுபோன்று நான் இறப்பதற்கு அவர்தான் காரணம். லாட்டரியால் நான் 62 லட்ச ரூபாயை இழந்து விட்டேன். என்னால் தாங்கமுடியவில்லை. நான் இன்னும் உயிரோடு இருந்தால், லாட்டரி வாங்கிக் கொண்டே இருப்பேன். பைத்தியமாக இருப்பேன்.
எனது குடும்பத்திற்கு நஷ்டஈடாக, செந்திலிடம் இருந்து ரூ 30 லட்சத்தை நண்பர்கள், உறவினர்களிடம் பெற்றுத் தர வேண்டும். நான் இது போன்று செய்ததற்கு அண்ணன் அமைச்சர் சு.முத்துசாமி என்னை மன்னிக்க வேண்டும். இதை சொல்ல மனசு கஷ்டமா இருக்கு. என் குடும்பத்திற்கு நஷ்டஈடு வாங்கித்தர வேண்டும். என் பொண்ணுக்கு அரசு வேலை வாங்கித்தர வேண்டும். இது என் கடைசி ஆசை. இதை நிறைவேத்த வேண்டும். எப்படியாவது லாட்டரி சீட்டை ஒழித்து விடுங்கள். இதனால எத்தனையோ குடும்பம் ரொம்ப பாதிச்சிடுச்சுண்ணா. அந்த நடவடிக்கையை நீங்க எடுக்கணும். இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்ததற்கு என்னை எல்லோரும் மன்னிக்கணும். என்னால் தாங்க முடியவில்லை’ என்று வீடியோ பதிவில் ராதாகிருஷ்ணன் பேசி பதிவு செய்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட ராதாகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறையினர் கூறும்போது, தற்கொலை செய்து கொண்ட ராதாகிருஷ்ணனின் மனைவி மாலதியிடம் இருந்து புகார் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட ராதாகிருஷ்ணன், முன்பு தறிப்பட்டறை நடத்தி வந்துள்ளார். அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, நூல் கமிஷன் ஏஜெண்டாக இருந்து வந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையின்படி, இவருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால், பணநெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் தனது வாட்ஸ் அப் பதிவில் கூறியது போல், 62 லட்ச ரூபாயை எந்த காலகட்டத்தில், எவ்வாறு இழந்தார் என்பதைத் திரட்டும் விதமாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை, தடைசெய்யப்பட்ட மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக, 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலைதளம், வாட்ஸ் அப் மூலம் லாட்டரி விற்பனை நடப்பதைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.
திமுக கவுன்சிலரின் கணவர்: தற்கொலை செய்து கொண்ட ராதாகிருஷ்ணன் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ள செந்தில்குமார் என்பவர், திமுகவைச் சேர்ந்தவர். இவரது மனைவி கீதாஞ்சலி, ஈரோடு மாநகராட்சி 39 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். ஈரோடு மாநகரில் கருங்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை பல்வேறு வகைகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. போலீஸார் துணையுடன் ஆளுங்கட்சியினர் இந்த தொழிலை நடத்தி வந்ததால், யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலை தொடர்ந்து வந்தது. போலீஸார் பெயரளவிற்கு சில வழக்குகளை பதிவு செய்வதோடு நிறுத்திக்கொண்டனர். இந்நிலையில், தற்போது தற்கொலை செய்து கொண்ட ராதாகிருஷ்ணன், வெளிப்படையாக குற்றம்சாட்டியதன் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.