ஆரணியில் இளம் பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்த நிலையில், காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் பகுதி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரவி. இவருடைய மகள் சரண்யா (23) என்பவருக்கும், ஆரணி டவுன் ஜிம் மாஸ்டர் அமரேசன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக நேற்றிரவு சரண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அமரேசன் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது மனைவி தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர், சரண்யாவை கீழே இறக்கி பார்த்தபோது சரண்யா உயிரிழந்தது தெரியவந்தது.
பின்னர், உடனடியாக சரண்யாவின் உறவினர்கள் மற்றும் மோட்டூர் கிராமத்தில் உள்ள ரவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சரண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறி அடித்துக்கொண்டு வந்து பார்த்தனர். அப்போது சரண்யா தரையில் படுக்க வைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சரண்யாவின் பெற்றோர் ஒரு ஆட்டோவில் சரண்யாவை தூக்கிக்கொண்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சரண்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் தனது மகளை அவருடைய கணவர் அமரேசன் அடித்துக் கொன்று தூக்கு மாட்டியுள்ளார். எனவே, சரண்யாவின் இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது எனக் கூறி நேற்று இரவு ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சரண்யாவின் திருமணம் நடந்து மூன்றாண்டுகளே ஆகியுள்ளதால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM