தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், முதல்முறையாக கடந்த ஜனவரி மாதம் அமைச்சர்கள் கவனித்து வந்த துறைகளில், சில பிரிவுகள் மாற்றித் தரப்பட்டன. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த சர்க்கரை ஆலைகள் பிரிவு, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வசம் கொடுக்கப்பட்டது. அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடமிருந்து, விமானநிலையங்கள் துறை பிரித்தெடுக்கப்பட்டு, தொழில்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வசமிருந்த அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், அமைச்சர் மஸ்தான் வசம் அளிக்கப்பட்டது. நிர்வாக வசதிக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், முதல்முறையாக அமைச்சரவையில் இலாகா மாற்றம் நடைபெற்றது ராஜ கண்ணப்பன் விவகாரத்தில்தான்.
முதுகுளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவர், சாதிப் பெயர் சொல்லித் தன்னை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒருமையில் திட்டியதாகக் குற்றம்சாட்டினார். இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், ராஜகண்ணப்பன் வகித்துவந்த போக்குவரத்துத்துறை அவரிடமிருந்து பறிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் தொடர்பான பேச்சுகள் எழவில்லை. ஆனால், சமீபகாலமாக தலைமைச் செயலகத்தில் இரண்டு அமைச்சர்கள் சந்தித்துக் கொண்டாலே, “என்னய்யா… உனக்கு எந்த டிபார்ட்மென்ட்?” என்கிற பேச்சுதான் களைக்கட்டுகிறது. அமைச்சரவை இலாகா மாற்றம் தொடர்பான பேச்சுகள் மீண்டும் சூடுபிடித்திருக்கின்றன.
இதுகுறித்து முதல்வருக்கு நெருக்கமான மூத்த அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். “ஓராண்டு ஆட்சியில் அமைச்சர்களின் ‘பெர்பார்மென்ஸ்’ ரிப்போர்ட் உளவுத்துறை மூலமாக முதல்வருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. செயல்படாத அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க முதல்வர் தயாராக இல்லை. அதேநேரம், அவர்களின் இலாகாகளை மாற்ற திட்டமிடுகிறார். அமைச்சரவைக்குள் உதயநிதியைக் கொண்டுவருவதற்காகவும், அதிருப்தியிலிருக்கும் ஐ.பெரியசாமியை திருப்திப்படுத்துவதற்காகவும் கூட இந்த மாற்றங்கள் செய்யப்படவிருக்கின்றன என்று சொல்லலாம். அமைச்சர் மெய்யநாதன் வசம் விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை கூடுதலாக இருக்கிறது. அந்தத் துறையை மெய்யநாதனிடமிருந்து பிரித்து, உதயநிதி வசம் கொடுக்க தீர்மானித்திருக்கிறார் முதல்வர். இதற்காகத்தான், ‘234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒரு சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்’ என்கிற அறிவிப்பை சட்டமன்றத்தில் முதல்வரே செய்திருக்கிறார். விளையாட்டுத்துறையின் மூலமாக, இளைஞர்களுடன் தொடர்பிலேயே இருக்க முடியும். தவிர, இந்த சிறு விளையாட்டு அரங்கங்கள் அனைத்தும் கட்டப்பட்டு, அவை உதயநிதியால் திறக்கப்படும்போது பெரியளவில் இளைஞர்களிடையே வரவேற்பு எழும். இதைத்தான் முதல்வர் குடும்பம் விரும்புகிறது.
தனக்கு வேறு துறையை மாற்றித் தரும்படி, கூட்டுறவுத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி கட்சித் தலைமையிடம் கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார். தான் வாக்குறுதி அளித்திருந்தபடி திண்டுக்கல் மாநகராட்சியையும் கைப்பற்றிக் காட்டிவிட்டதால், அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறையை ஒதுக்க ஆட்சி மேலிடமும் தீர்மானித்திருக்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி வசமிருக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை எதிர்பார்க்கிறார் பெரியசாமி. ஆனால், செந்தில்பாலாஜியை டிஸ்டர்ப் செய்ய மேலிடம் விரும்பவில்லை. இதில் பெரியசாமி கடும் அப்செட். ‘நம்ம ஆட்சியில தி.மு.க-காரன் எங்கய்யா வாழ்றான். அ.தி.மு.க-வுல இருந்து வந்தவர்கள், கடந்த ஆட்சியில டெண்டர் எடுத்தவர்கள்தான் செழிப்பா இருக்காங்க’ என்று தன் ஆதரவாளர்களிடம் நொந்து கொண்டிருக்கிறார் அவர். வேளாண்மை, வருவாய் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளையாவது எதிர்பார்க்கிறது பெரியசாமி தரப்பு. ஆனால், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகிய சீனியர்கள் கையில் அந்த துறைகள் இருப்பதால், அவர்களை மாற்ற முடியாது. ‘திண்டுக்கல் பெரியசாமியை எப்படி சமாளிப்பது?’ என திண்டாடிப் போயிருக்கிறது ஆட்சி மேலிடம். இதுவரை அவருக்கான புது இலாகா முடிவாகவில்லை.
சென்னையில், அமைச்சர் சேகர்பாபுவுக்கு ‘செக்’ வைக்கும் விதமாக திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவியை அமைச்சராக்குவதற்கு காய் நகர்த்தப்படுகிறது. முதல்வர் குடும்பத்திலிருப்பவர்களே இந்தத் திட்டத்தை சைலென்டாக அரங்கேற்றுகிறார்கள். ஆனால், அமைச்சரவையில் இன்னும் ஒருவரை மட்டுமே சேர்க்க முடியும் என்பதால், தாயகம் கவிக்கு வாய்ப்பில்லை. தவிர, சேகர்பாபுவை ‘டிஸ்டர்ப்’ செய்ய முதல்வரும் விரும்பவில்லை. அமைச்சர் எ.வ.வேலு வசமிருக்கும் பொதுப்பணி(கட்டடம்) துறையை தனக்கு அளிக்கும்படி அமைச்சர் துரைமுருகன் நேரடியாகவே ஆட்சி மேலிடத்திடம் கேட்டுவிட்டார். ஆனால், அதற்கு மேலிடம் சம்மதிக்காததால் துரைமுருகன் அப்செட். ஒருங்கிணைந்த உள்ளாட்சித் துறைகளை தனக்குக் கேட்கிறார் கே.என்.நேரு. அப்படி செய்தால், ஊரக வளர்ச்சித்துறையை வைத்திருக்கும் பெரியகருப்பனுக்கு வேறொரு முக்கியமான துறையை ஒதுக்க வேண்டியது வரும். ஏற்கெனவே யாதவரான ராஜகண்ணப்பனுக்கு டம்மியான துறை ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், மற்றொரு யாதவரான பெரியகருப்பனையும் டம்மியாக்கி அந்த சமூகத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்க மேலிடம் விரும்பவில்லை. சி.வி.கணேசன் வசமிருக்கும் தொழிலாளர் நலத்துறையை அமைச்சர் மனோ தங்கராஜ் வசம் கொடுத்துவிட்டு, மனோ தங்கராஜ் பொறுப்பு வகிக்கும் தகவல் தொழில்நுட்பத்துறையை கணேசனுக்கு அளிக்கவும் திட்டமிடப்படுகிறது. இப்படி, ஓரிரு துறைகளில்தான் மாற்றம் வரவிருக்கிறதே தவிர, பெரியளவில் அமைச்சரவையில் மாற்றமிருக்காது” என்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் ஆட்சியை கொண்டுசெல்ல திட்டமிட்டிருக்கிறாராம் முதல்வர். “அதற்காக ஒவ்வொரு அமாவாசையிலும் அமைச்சரவை மாற்றமிருக்காது, ஆண்டுக்கொரு முறை மாற்றமிருக்கும்” என்கிறது அறிவாலய வட்டாரம். ஜூன் மூன்றாம் தேதிக்குள் தி.மு.க-வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முறைப்படி பதவியேற்கவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்கு முன்னதாகவே உதயநிதியின் பட்டாபிஷேகத்தை நடத்திவிட தீர்மானித்திருக்கிறது முதல்வரின் குடும்பம். பட்டாபிஷேகத்தோடு சேர்த்து அமைச்சரவை இலாகா மாற்றமும் வரலாம் என்பதே அறிவாலயத்திலிருந்து வரும் தகவலாக இருக்கிறது.