நாமக்கல்லில் பள்ளி மாணவனுக்கு கஞ்சா வழங்கியதை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட கோஷ்டி தகராறில் கார் டிரைவரின் வீடு புகுந்து சராமரியாக குத்தியும், கல்லால் அடித்தும் கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
நாமக்கல் நகராட்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் பிரபாகரன்(வயது 29). கார் டிரைவரான இவரும், செல்லப்பா காலனியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரும் செல்லப்பா காலனி பகுதியில் மது அருந்தி உள்ளனர். அப்போது பிரபாகரன் 10ஆம் வகுப்பு படிக்கும் தனது அண்ணன் மகனுக்கு ஏன் கஞ்சா வழங்கி அவனது எதிர்காலத்தை வீணாக்குகிறாய்? என சுரேந்தரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் பிரபாகரன் சுரேந்திரனை தாக்கி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேந்தர் தனது நண்பர்களிடம் தெரிவித்து பிரபாகரனை பழிதீர்க்க கூறியுள்ளான்.
இதனையடுத்து செல்லப்பா காலனி, மேதரமாதேவியைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் செல்லப்பா காலனிக்கு வந்தனர். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் பிரபாகரன் தான் வைத்திருந்த கத்தியால் மேதரமாதேவியை சேர்ந்த விக்னேஷை வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த விக்னேஷை அவரது நண்பர்கள் சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, மற்ற சிலர் பிரபாகரனை பழிவாங்க துரத்தியுள்ளனர். பிரபாகரன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சமடைந்த நிலையில் 5 பேர் கொண்ட கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பிரபாகரனை 17 இடங்களில் சராமரியாக குத்தி அவரை வீட்டின் வெளியே இழுத்து வந்து தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.
இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு குற்றவாளிகளை தீவிரமாக தேடினர். தீவிர தேடுதல் வேட்டையில் அப்பகுதியிலேயே மறைந்திருந்த சுரேந்தரின் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி, மேதரமாதேவியைச் சேர்ந்த சபின் உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்தனர். மேலும் இக்கொலை சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது எனவும் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM