அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக தலைநகராக அபுதாபி செயல்படுகிறது. உலகில் எண்ணெய் வளமிக்க நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் 6-வது இடத்தில் உள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்த நாட்டின் அதிபராக ஷேக் கலிபா பின் சையத் அலி நஹ்யான் (73) பதவி வகித்து வந்தார். பல்வேறு நெருக்கடியான நேரத்தில் நாட்டை திறம்பட வழிநடத்தினார்.
அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் நட்பு பாராட்டினார். கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்.
கடந்த 2014-ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அவர் பொதுநிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கவில்லை. முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அலி நஹ்யான் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரக சட்ட விதிகளின்படி துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தோம் நாட்டின் தற்காலிக அதிபராக செயல்படுவார். அடுத்த 30 நாட்களுக்குள் 7 அமீரகங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து புதிய அதிபரை தேர்வு செய்வார்கள். மறைந்த அதிபர் ஷேக் கலிபாபின் சையத் அலி நஹ்யானின் தம்பி ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் புதிய அதிபராக தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.