Rayudu retirement flip-flop: CSK insider says there are ‘slight problems in the family’: சிஎஸ்கே அணியின் முன்னனி பேட்ஸ்மனான அம்பதி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்து, பின்னர் முடிவை மாற்றியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இன்சைடர் ஒருவர் கூறுகையில், “குடும்பத்தில் சிறிய பிரச்சனைகள்” இருப்பதாகவும், விரைவில் அவை சரிசெய்யப்படும் என்றும் உறுதியளித்தார். சனிக்கிழமையன்று, அம்பதி ராயுடு ஒரு ட்வீட்டை வெளியிட்டார், அதில் தனது ஓய்வு முடிவை மாற்றுவதற்கு முன்னும் மற்றும் ட்வீட்டை நீக்குவதற்கு முன்னும் தனது ஐபிஎல் வாழ்க்கையின் சிறந்த காலகட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அதில், இது எனது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “13 வருடங்களாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடி மகிழ்ச்சியாக இருந்தேன்,” என்று ட்வீட் செய்த அம்பதி ராயுடு, “அற்புதமான பயணத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் CSK க்கு மனப்பூர்வமாக நன்றி சொல்ல விரும்புகிறேன்.” என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சில நிமிடங்களில் ராயுடு அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.
அம்பதி ராயுடு ஓய்வு பெறவில்லை என்பதை சிஎஸ்கே தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தினார். “அவர் ஓய்வு பெறவில்லை. இந்த சீசனில் சிறப்பாக செயல்படாததால் சற்று ஏமாற்றமாக இருந்தார். அதனால் (விரக்தியில்) அவர் இதனை ட்விட்டரில் வெளிப்படுத்தினார். பின்னர் நான் அவரை அழைத்து, அவர் சிறப்பாக செயல்படவில்லை என்பது நிர்வாகத்தின் கருத்து அல்ல மற்றும் அவர் ஓய்வு பெறக்கூடாது என்று கூறினேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். அவர் அணி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுகிறார், அவர் சிறப்பாக விளையாடவில்லை என்று நினைத்ததால் ஓய்வு பெற நினைத்தார், அவ்வளவுதான், ”என்று காசி விஸ்வநாதன் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
36 வயதான அம்பதி ராயுடு கடந்த ஆண்டு சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார். இந்த முறை மெகா ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி நிர்வாகமானது ராயுடுவை அணியிலிருந்து விடுவித்து, பின்னர் மெகா ஏலத்தில் அவரை ரூ. 6.75 கோடிக்கு வாங்கியது. நான்கு முறை சாம்பியனான சிஎஸ்கே அணியின் இந்த ஆண்டு IPL மோசமாக இருந்தது, இரண்டு குரூப் லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில் பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து சிஎஸ்கே வெளியேறியுள்ளது. பேட்டிங்கில் வீரர்கள் சீராக ரன் குவிக்க தவறுவது அவர்களின் உண்மையான பிரச்சனையாக உள்ளது. இதில் ராயுடுவின் பங்களிப்பு, 12 போட்டிகளில் இருந்து 271 ரன்கள் என ஆவரேஜ்ஜாக உள்ளது.
இதையும் படியுங்கள்: சோதனை மேல் சோதனை… கிரிக்கெட் கடவுளிடம் அழுத கோலி கூறியது என்ன?
சிஎஸ்கே முகாமில் எல்லாம் சரியாக இல்லை என்பது கேப்டன்சி மாற்றத்திலும் எதிரொலித்தது என்று கிரேப்வைன் கூறுகிறார். போட்டி தொடங்குவதற்கு முன் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார், ஆனால் அவர் “அவரது ஆட்டத்தில் கவனம் செலுத்துவதற்காக” எம்.எஸ். தோனியிடம் மீண்டும் ஒப்படைத்தார். பின்னர், விலா எலும்பில் காயம் ஏற்பட்டதால், ஜடேஜா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவிக்கப்பட்டார். அணிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று விஸ்வநாதன் வலியுறுத்தினாலும், சிஎஸ்கே அணியினர் சிலர் கேப்டன் பிரச்சினையை கையாண்ட விதத்தில் ஜடேஜா மகிழ்ச்சியடையவில்லை என்று கூறினார்.
சில சிக்கல்கள் இருப்பதாக ஒரு CSK இன் இன்சைடர் ஒப்புக்கொண்டார். “பெரிய குடும்பத்தில் எப்போதும் சில பிரச்சனைகள் இருக்கும். அதுபோல நாங்கள் சிறுசிறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம், அதிலிருந்து வெளியே வருவோம். அதற்கான திறமைகள் எங்களிடம் உள்ளன,” என்றார்.