இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு முதல் பரவத் தொடங்கியது. மக்கள் பாதுகாப்பை கருதி நாடு முழுவதும் மார்ச் மாதத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்பிலேயே பாடம் கற்பித்து வந்தனர்.
இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், மாணவ, மாணவிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நேரடி வகுப்பு தொடங்கிய நிலையில், சுமார் 30 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு திரும்பவில்லை என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மல்கனகிரி, பௌத், கஜபதி, சம்பல்பூர் மற்றும் நுவாபாடா போன்ற மாவட்டங்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வருகை மாநில சராசரியை விட குறைவாக உள்ளது. இதேபால், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வரையிலான மாணவர்களின் வருகையைப் பொருத்தவரை மோசமாக உள்ளது.
மேல்நிலைப் பிரிவில், கஜபதி, போலங்கிர், பர்கர், சோனாபூர், நுவாபாடா, கட்டாக், கோர்தா, கோராபுட், கஞ்சம், பௌத், மல்கங்கிரி, கியோஞ்சர், சம்பல்பூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகை மாநில சராசரியை விட குறைவாக உள்ளது. இது கவலைக்குறிய விஷயம் என பள்ளி மற்றும் வெகுஜன கல்வித் துறை செயலாளர் பிபி சேதி தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பிபி சேதி கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், மாவட்ட கல்வி அதிகாரிகள் வழங்கிய பள்ளிகளின் தினசரி வருகை தரவை பகுப்பாய்வு செய்ததில், சுமார் 70 சதவீத மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்து இரண்டு ஆண்டு இளைவெளிக்குப் பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கிய நிலையில் சுமார் 30 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பவில்லை. இதனால், அவர்களை பள்ளிகளுக்குத் திரும்ப அழைத்து வருவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடித்ததில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. இதுவரை நடந்த 10,11,12-ம் வகுப்பு தேர்வுகளில் 2.4 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் – பள்ளிக் கல்வித்துறை