கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை- காங்கிரஸ் காட்டம்

உதய்பூர்:
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவு கடந்த 2 மாதங்களாக அதிகரித்ததால் இந்தியாவில் கோதுமை விலை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 
இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது.
கோதுமை அறுவடை
எனினும், சிலருக்கு மட்டும் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி கோதுமை ஏற்றுமதி செய்பவர்கள், ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து கோதுமைக்கான தொகையை பெற்றதற்கான கடிதத்தை வைத்திருந்தால் அவர்களுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
ஆனால் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை எனவும் விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியதாவது:-
மத்திய அரசு போதுமான அளவு கோதுமையை கொள்முதல் செய்ய தவறியதே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். சரியான அளவில் கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
கோதுமை ஏற்றுமதியை தடை செய்வது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை. அதிக ஏற்றுமதி விலையின் பயன்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த நடவடிக்கையால் ஆச்சரியம் அடையவில்லை. இந்த அரசு விவசாயிகளிடம் ஒருபோதும் நட்புடன் இருந்ததில்லை.
இவ்வாறு ப.சிதம்பரம்  கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.