கொழும்பு:
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவருக்கு பதில் புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அவர் மக்களுக்கு 3 வேளை உணவு கிடைப்பதை விரைவில் உறுதி செய்வேன் என்று அறிவித்துள்ளார்.
அவருக்கு இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. அவருக்கு முழுமையான ஆதரவு கொடுப்பதாக மகிந்த ராஜபக்சேயின் கட்சி அறிவித்து உள்ளது.
ரனில் விக்ரமசிங்கே தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்க போவதில்லை என்று அனைத்து எதிர்கட்சிகளும் அறிவித்துள்ளன. இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கே பெரும்பான்மை பலத்தை நிருபித்துக் காட்ட வேண்டியுள்ளது. வருகிற 17-ந்தேதி இதற்காக பாராளுமன்றத்தில் பலப்பரீட்சை நடக்கிறது. அப்போது ரனிலுக்கு ஆதரவாக ராஜபக்சே கட்சி செயல்படும் என்று தெரிகிறது.
இலங்கையில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரனில் விக்ரமசிங்கை ஏற்க மாட்டோம் என்றும் அறிவித்து உள்ளனர். அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலகும் வரை போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்து உள்ளனர்.
இந்நிலையில் இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே எதிர்க்கட்சி தலைவர் சஜித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
சம்பிரதாய அரசியலை கைவிடுங்கள். கட்சி பேதமின்றி தாய்நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இணைந்து பணியாற்ற எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.