சரிந்த கொள்முதல்; கிடுகிடு விலை உயர்வு: கோதுமை ஏற்றுமதிக்கு தடை ஏன்? முழு விவரம்

உலகம் முழுவதும் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துவரும் நிலையில், மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கோதுமை தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் கடந்த இரண்டு மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோதுமை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடஇந்திய மாநிலங்களில் கோதுமையே முக்கிய உணவு-தானியமாக பயன்படுத்தப்படுவதால், கோதுமை விலையேற்றம் ஏழை மக்களை கடுமையாக பாதித்து, பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
ஏற்கெனவே ஏற்றுமதி ஒப்பந்தத்தை இறுதி செய்து அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்திருப்பவர்கள் கோதுமை ஏற்றுமதியை தொடரலாம் என அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மத்திய அரசு பிற நாடுகளுக்கு உதவ ஏற்றுமதி செய்ய முடிவு செய்தால் அத்தகைய ஏற்றுமதிகளுக்கும் அனுமதி வழங்கப்படும். இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. எகிப்து மற்றும் துருக்கி உள்ளிட்ட
நாடுகளுக்கு 4 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய ஏற்கெனவே ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
image
சில்லறை சந்தை பணவீக்கம் 8 சதவிகிதத்தை நெருங்கிவரும் நிலையில், கோதுமை மாவு விலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பிஸ்கட் மற்றும் பிரட் உள்ளிட்ட பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் ஏழை மக்களின் குடும்ப பட்ஜெட்டை பாதிக்கும் என்பதால், மத்திய அரசு கோதுமை ஏற்றுமதி தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்றுமதி செய்ய தனியார் அதிக விலைக்கு கோதுமையை வாங்குவதால், விவசாயிகள் அரசு கொள்முதலுக்கு விற்பனை செய்வதை குறைத்துள்ளனர். கோதுமையை வாங்கும் தனியார் அதிக அளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் என அரசு கருதுகிறது என அதிகாரிகள் விளக்கினார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிலிருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டு இருப்பதால் உலக அளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகச் சந்தையில் கோதுமை விலை உயர்ந்து வருகிறது. போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மற்றும் போர் தொடுத்ததால் சர்வதேச தடைகளை சந்தித்துவரும் ரஷ்யா உலகின் முன்னணி கோதுமை ஏற்றுமதியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருட கோதுமை அறுவடை பருவத்தில் இதுவரை 18 மில்லியன் டன் கோதுமை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் இதே தருணத்தில் மத்திய அரசு 43 டன் கோதுமையை கொள்முதல் செய்திருந்தது. பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கோதுமை அறுவடை மார்ச்-ஏப்ரல் மாதங்களில் முடிவடைந்த நிலையில், இனி கொள்முதல் பெருமளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை.
image
கொள்முதல் விலையைவிட அதிக விலை கொடுக்க தயாராக இருக்கும் தனியார் வியாபாரிகளுக்கு விவசாயிகள் கோதுமையை விற்று வருகின்றனர். விளைச்சலில் குறைவு இல்லை என்றாலும் கொள்முதல் குறைந்துள்ளது என்றும், தொடர் விலை உயர்வில் லாபம் பார்க்க வியாபாரிகள் கோதுமையை வாங்கிக் குவிப்பதாகவும் அதிகாரிகள் சந்தை நிலையை விவரித்துள்ளனர்.
கொள்முதல் சென்ற வருடம்போல இருக்கும் என்கிற கணிப்பில், மத்திய அரசு கோதுமை ஏற்றுமதி இந்த நிதியாண்டில் 10 மில்லியன் டன் வரை நடைபெறலாம் என கணித்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றி பேசும்போது, உலக நாடுகளுக்கு உணவுப்பொருட்களை அளிக்க இந்தியா தயாராக இருப்பதாக சென்ற மாதம் தெரிவித்திருந்தார். அரசின் கோதுமை கொள்முதல் சரிந்ததால், ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பணவீக்கத்தை தடுக்க, ரிசர்வ் வங்கி சமீபத்தில் வட்டி விகிதங்களை அதிகரித்தும், பணப்புழக்கத்தைகுறைத்தும் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– கணபதி சுப்ரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.