சித்ரா மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் ; வழக்கை திசை திருப்ப முயற்சி : பெற்றோர் குற்றச்சாட்டு

சென்னை : 'நடிகை சித்ரா மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம். வழக்கை திசை திருப்ப இப்போது நாடகமாடுகிறார்' என, சித்ராவின் பெற்றோர் கூறினர்.

சென்னை, பூந்தமல்லி அருகே கணவர் ஹேம்நாத்துடன் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த 'டிவி' நடிகை சித்ரா 29, தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் 2020 டிச.,9ல் நடந்தது. சித்ராவை தற்கொலைக்கு துாண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2021 மார்ச் 3ல் ஜாமினில் வெளியே வந்தார்.

கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஹேம்நாத் புகார் அளித்தார். அதில், 'சித்ராவின் தற்கொலைக்கு பின்னணியில் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர். 'மாபியா' கும்பலிடம், எனக்கு தெரிந்த நபர்கள் பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். அதற்கு என்னையும் உடந்தையாக்க பார்க்கின்றனர். மறுத்தால் கொன்றுவிடுவோம் என மிரட்டுகின்றனர்' என, கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை, திருவான்மியூரில் உள்ள வீட்டில், சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா ஆகியோர் நேற்று அளித்த பேட்டி : என் மகள் தைரியமான பெண். அவரை ஹேம்நாத் கோழையாக்கிவிட்டார். என் மகள் தற்கொலை செய்து கொண்டார் என ஒரு நாளும் கூறமாட்டோம். அவரை ஹேம்நாத் கொன்றுவிட்டார். அவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளது.

சித்ராவின் தற்கொலைக்கு பின்னணியில் முன்னாள் அமைச்சர்கள் இருப்பதாக கூறுகிறார். அப்படியானால் மனைவிக்கு தொல்லை கொடுக்கும் நபரை, இவர் என்ன செய்திருக்க வேண்டும். என் மகளின் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம். வழக்கை திசை திருப்ப இப்போது நாடகமாடுகிறார். என் மகளுக்கு, புகை, மது குடிக்கும் பழக்கம் இல்லை. என் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என, போராடி வருகிறோம். அ.தி.மு.க., ஆட்சியில் புகார் அளித்தோம்; நடவடிக்கை இல்லை.

ஆட்சி மாறியவுடன் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். முதல்வரை சந்திக்க முயற்சித்தோம். முதல்வர் தனிப்பிரிவில் மனு அளியுங்கள் என கூறிவிட்டனர். போலீஸ் கமிஷனர் அலுவலகம் உட்பட பல இடங்களில் புகார் அளித்தும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. என் மகளை போல இன்னொரு பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. போலீசார் தீர விசாரித்து, குற்றம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.