அமெரிக்காவில் ஒரு சூப்பர்மார்கெட்டிற்குள் இராணுவ சீருடையில் நுழைந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தில் பஃபலோ நகரத்தில் உள்ள டாப்ஸ் பல்பொருள் அங்காடியில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிஹ்ஸ்மை மனதியம் 2.30 மணியளவில் இராணுவ சீருடையில் அங்காடிக்குள் நுழைந்த சந்தேக நபர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக பஃபலோ நகர காவல்துறை தெரிவித்தது.
சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்ததையடுத்து, துப்பாக்கிச்சூடு நிறுத்தப்பட்டு, தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டார். இப்போது அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல்தாரி இராணுவ உடைக்கு மேல் உடல் கவசம் அணிந்து இரண்டு துப்பாக்கிகளை ஏந்தியவாறு அங்காடிக்குள் நுழைந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இது ஒரு இனவெறித்த தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுவதாகா பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான பல்பொருள் அங்காடியானது, பஃபலோ நகரத்திற்கு வடக்கே சுமார் 3 மைல் தொலைவில், கறுப்பினத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.