அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் பாஜக சார்பில் முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேவ் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த கட்சியில் எழுந்த அதிருப்தி காரணமாக பதவி விலகியதாக கூறப்படுகிறது. கடந்த 2018ல் திரிபுரா மாநிலத்தில் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை தோற்கடித்து பாஜக முதல்முறையாக ஆட்சியை பிடித்தது. 60 உறுப்பினர்களை கொண்ட சட்ட சபையில் பாஜகவுக்கு 36 எம்.எல்.ஏக்களும், 8 ஐ.பி.எப்.டி. எம்.எல்.ஏக்களின் ஆதரவும் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பாஜக சார்பில் பிப்லப் குமார் தேவ் முதலமைச்சராக உள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்கிய பிப்லப் குமார் தேவுக்கு உட்கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. அவர் மீது பாஜக எம்.எல்.ஏக்கள் டெல்லி தலைமைக்கு புகார் அனுப்பிய நிலையில், இரு தினங்களுக்கு முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில் மாநில ஆளுநர் சத்ய தேவ் நாராயன் ஆர்யாவிடம் பிப்லப் குமார் தேவ் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். இன்று இரவே பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக ஆட்சி மீது எழுந்த எதிர்ப்பு அலையை சமாளிக்கவே பிப்லப் குமார் தேவ் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.