உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்த ஹிந்து கோவிலை இடித்து, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியின்போது, ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது.
ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது. இந்த அம்மனுக்கு, தினமும் பூஜை நடத்த அனுமதிக்க கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், சிங்கார கவுரி அம்மன் கோவிலின் அமைப்பு குறித்து, வீடியோ பதிவுடன் கள ஆய்வு நடத்த, வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையில், ஐந்து பேர் அடங்கிய குழுவை நியமித்தது. இந்த உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து அந்த மசூதியில், நீதிமன்ற உத்தரவுப்படி கள ஆய்வு துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அங்கு, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற கமிஷனர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் ஆகியோர் வந்தடைந்தவுடன் ஆய்வு துவங்கியதாக வாரணாசி மாவட்ட கலெக்டர் கவுஷல் ராஜ் ஷர்மா கூறியுள்ளார்.
நீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆய்வு பணிகள் துவங்கியதை தொடர்ந்து, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மசூதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.