டெல்லி: டெல்லியில் 30 பேரின் உயிர்களைப் பறித்த தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி முந்த்கா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் வணிக வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 27 பேர் உயிரிழந்தனர். தற்போது சம்பவ இடத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்த 3 உடல்களை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் இதுவும் ஒன்று என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்த தகவல் மாலை 4.40 மணிக்கு தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து 5 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பின் அணைத்தனர். இதுவரை 60 பேர் வரை காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். தீவிர தீக்காயங்களுடன் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆய்வு நடத்தினர். பின்னர் பேசிய மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.