Delhi Fire accident: டெல்லியில் முண்ட்கா மெட்ரோ நிலையம் அருகே 4 மாடி வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் இரவு முழுவதும் போராடி தீயை அணைத்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வீடியோவில், தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து மக்கள் கயிறு மூலம் தப்பிப்பதும், உடைந்த ஜன்னல் கண்ணாடியில் தொங்கிட்டு இருப்பதையும் காண முடிகிறது. பலர், அங்கிருந்து வேறு கட்டிடங்களுக்கு ஜம்ப் செய்வதையும் காண முடிந்தது.
மாலை 4.40 மணியளவில் தீப்பிடிக்க தொடங்கியது. பின்னர், மளமளவென பரவிய தீயை ஒரளவு அணைத்து, கட்டிடத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் செல்லும் போதே, கருகிய உடல்களை தான் ஒவ்வொன்றாக கண்டெடுத்து வந்தனர்.
உயிரிழந்தோர் எண்ணிக்கையை காவல் துறையினர் உயர்த்திக்கொண்டே வந்தனர். முதலில் 14, பின்னர் 16,20,27 என அதிகரித்து வந்தது. தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சுமார் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிர் இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டிருந்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “டெல்லியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது” என தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், இந்த துயர சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். தீயை கட்டுப்படுத்தவும், மக்களின் உயிரைக் காப்பாற்றவும் எங்களின் துணிச்சலான தீயணைப்பு வீரர்கள் தங்களால் இயன்றவரை முயற்சித்து வருகின்றனர் என பதிவிட்டிருந்தார்.
டெல்லி வணிக கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டதும் அதனை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறைத் தலைவர் அதுல் கர்க் கூறினார்.
காவல் துறை கூற்றுப்படி, கட்டிடத்தில் சிசிடிவிகள், வைஃபை ரவுட்டர்கள் மற்றும் பிற மின் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த முதல் தளத்திலிருந்து ஏற்பட்ட தீ, 2 மற்றும் 3 ஆவது மாடிகளுக்கு பரவியிருக்கலாம். டஜன் கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டதாக தெரிவித்தார்.
தீப்பிடித்த சமயத்தில், கட்டிடத்திற்குள் குறைந்தது 100 பேர் மாட்டிக்கொண்டு இருக்கலாம் என உள்ளூர் வாசிகளும், அதிகாரிகளும் கணித்தனர். அங்கிருந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இரண்டாவது மாடியில் மீட்டிங் நடைபெற்றதால், அதிகப்படியான மக்கள் திரண்டிருந்தனர். அறை முழுவதும் ஆட்கள் இருந்ததால், தீப்பிடித்த தகவல் அறிந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றது சிக்கலை ஏற்படுத்தியது. அவர்களில் பெரும்பாலானோரால் மெயில் கேட்டை அடைய முடியவில்லை என்றார்.
தீ 2ஆவது மாடியில் பரவ தொடங்கியது, மக்கள் அனைவரும் 3 ஆவது மாடிக்கு விரைந்தனர்.இரவு 10 மணியளவில், தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு உதவ தேசிய தீயணைப்பு அமைப்பினர் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.