கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தின் மீது ரோந்து பணி போலீசாரின் ஜீப் மோதிய விபத்தை, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக சொல்ல வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்களை போலீசார் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அடுத்துள்ள மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாவதி. இவரும் இவரின் தாயும் கள்ளக்குறிச்சியில் உள்ள வங்கிக்கு பணம் எடுப்பதற்காக, தங்களது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது அவர்களின் இரு சக்கர வாகனத்திற்கு பின்வந்த ரோந்து பணி போலீசாரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரபாவதி மற்றும் அவரின் தாயார் சிறிது தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் மீது ஒரு புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வெளியான அந்த தகவலின்படி,
இந்த விபத்து குறித்து போலீசார் இரு பெண்களிடமும் வாக்குமூலம் பெறுவதற்காக சென்றுள்ளனர். அப்போது போலீசார் தரப்பில், ‘உங்கள் வாகனத்தின் மீது காவல்துறை வாகனம் மோதியதாக நீங்கள் சொல்ல வேண்டாம். அடையாளம் தெரியாத தண்ணி லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக சொல்ல வேண்டும்’ என்று போலீசார் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த பிரபாவதி மற்றும் அவரின் தாயார், வழக்கை திசை திருப்பாமல் தங்கள் மீது மோதிய வாகனத்தை ஓட்டி வந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் என்று அந்த தகவல் தெரிவிக்கின்றது.
(குறிப்பு : போலீசார் மீது வைக்கப்பட்டுள்ள இந்தப்புகார் தகவலின் அடிப்படையில் சொல்லப்படுகிறது. விரைவில் உண்மை என்ன என்பது தெரியவரும்)