சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்த பயணத்தில் தமிழக சூழல் குறித்து மத்திய அரசிடம் விளக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது அரசு விழாக்களிலும் வெளிப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும், இந்தி திணிப்பு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியும் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியும் இருவேறு கருத்துகளை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இலங்கையில் நிலைமை மோசமாகி வரும் நிலையில், அதன் அருகில் உள்ள இந்திய பகுதியான தமிழக கடலோரப் பகுதி நிலவரத்தையும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது.
வழக்கமாக மாதந்தோறும் ஆளுநர் ரவி டெல்லி சென்று, உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து தமிழக சூழல் குறித்து விளக்கி வருகிறார். தற்போது தமிழகத்தில் அரசு மற்றும் கட்சிகளிடையே நிலவும் கடும் இந்தி எதிர்ப்பு நிலைப்பாடு, இலங்கையில் நிலவும் பதட்டமான சூழல் ஆகியவற்றுக்கிடையே ஆளுநர் ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தப் பயணத்தில் வழக்கம்போல் உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்திப்பது மட்டுமல்லாது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவருடன் ஆளுநர் விவாதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இன்று மாலை மீண்டும் சென்னை திரும்ப இருப்பதாக தெரிகிறது.