வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பொழிந்தது. தாளவாடி, தலமலை, ஆசனூர், தொட்டகாஞ்சனூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்த மழையால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது. தலமலை வனப்பகுதியில் பெய்த மழையால் தாளவாடி ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. தாளவாடி காவல் நிலையம் அருகே மிகப்பெரிய தைலமரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையால், அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனிடையே, வரும் 17 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. லட்சத்தீவு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM