திரிபுரா
முதல்வரும்,
பாஜக
மூத்த தலைவருமான திப்லப் குமார் தேப் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் வழங்கியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றைய தினம அவர் சந்தித்தது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இன்று தனது பதவியை
பிப்லப் குமார் தேப்
திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து, திரிபுரா மாநில பாஜக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. முன்னதாக, மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தோல்வி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் அரசு செயலற்றதாக இருப்பதாக குற்றம் சாட்டி பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திரிபுரா மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்திய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிப்லப் குமார் தேப் ராஜினாமா குறித்து திரிபுரா மாநில அமைச்சர் ஒருவர் கூறுகையில், “அவர் ராஜினாமா செய்தது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. அவரை எது தூண்டியது, எதற்காக ராஜினாமா செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் கட்சியின் மத்திய தலைமையுடன் கலந்துரையாடினார். கட்சிக்கு சில திட்டங்கள் இருக்கலாம், அது கட்சிக்கு நல்லது என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிப்லப் குமார் தேப்-இன் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.